Our Feeds


Sunday, September 19, 2021

SHAHNI RAMEES

கருப்பு பூஞ்சை நோய்: அறிகுறிகள், பாதிப்புக்கள் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் முக்கிய விளக்கம்!


 கருப்பு பூஞ்சை நோயை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அதற்கான சிகிச்சை பெறாவிட்டால் இந்நோய் வளர்ச்சியடைந்து கண்ணையும் பாதிக்கக் கூடும். இதனால் கண்விழி பிதுங்குதல் , கண் பார்வை குறைபாடு என்பனவும் ஏற்படக் கூடும். அதற்கும் அடுத்த கட்டத்துக்கு சென்றால் மூளையைக் கூட பாதிக்கக் கூடும் என்று விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்றாளர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுகின்றமை தொடர்பில் விளக்கமளிக்கும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கையில் கொவிட் -19 தொற்று ஏற்பட முன்னரும் கருப்பு பூஞ்சை நோய் காணப்பட்டது. எனினும் தற்போது கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுக்கும் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரையில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கான பிரதான அறிகுறி முகத்தின் ஒரு பக்கத்தில் வலி ஏற்படுகின்றமையாகும் அத்தோடு ஒருபக்கமாக தலை வலி , தடிமன், சுவாசிப்பதில் சிரமம், மூக்கின் மேல் பக்கத்தில் கருப்பு புள்ளியைப் போன்று காயம் ஏற்படல் என்பனவும் இந்நோய்க்கான அறிகுறைகளாகும்.

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு மாத்திரமே கருப்பு பூஞ்சை ஏற்படும் என்று சிலர் கருதக் கூடும். ஆனால் அவ்வாறில்லை. இந்நோய் இரத்தத்தில் சீனியின் மட்டத்தை கட்டுப்படுத்தாத நீரிழிவு நோயாளர்கள் , ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைவடைந்துள்ள நோயாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படக் கூடும்.

கருப்பு பூஞ்சை நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமது இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று வேறு ஏதேனும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்கள் சுற்று சூழலில் ஏதேனும் செய்பாடுகளில் ஈடுபடும் போது தூய்மையான முகக்கவசத்தை அணிதல் கட்டாயமாகும்.

மிக முக்கியத்துவமுடையது கொவிட் தொற்றுக்கு உள்ளாகாமல் தம்மை பாதுகாத்துக் கொள்வதாகும். இதற்காக கொவிட் -19 தொற்றுக்காக வழங்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்வதும் அத்தியாவசியமானதாகும். இவற்றையும் மீறி கொவிட் -19 தொற்று ஏற்பட்டாலும் எந்தவொரு மேற்கத்தேய மருந்தையும் விருப்பத்திற்கு உட்கொள்ளாமல் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »