Our Feeds


Thursday, September 16, 2021

SHAHNI RAMEES

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்- தெமட்டகொட பகுதியில் சம்பவம்

 


தெமட்டகொடை, காளிபுள்ள வத்த பகுதியில் இன்று (15) ஹெரோயின் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதில், பொலிஸார் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸாருக்கு (CCD)கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, அப்பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மேலும் ஐவர் தெமட்டகொடை, காளிபுள்ள வத்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 10.2 கிராம் ஹெரோயினை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபருக்கு வேண்டப்பட்டவர்கள் உள்ளிட்ட ஒரு சில நபர்களால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு குறித்த சந்தேகநபரை மீட்க முயற்சி செய்ததாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையைில், குறித்த சம்பவத்தில் போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »