Our Feeds


Wednesday, September 15, 2021

SHAHNI RAMEES

மலையக தமிழர்களின் பிரச்சினைகளை மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு முன்வைக்க உத்தேசம்.

 


மலையக தமிழர்கள் எதிர்நோக்கும், அரசியல், சமூக, பொருளாதார, கலாசார உரிமை மீறல்களையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு முன்வைக்க உத்தேசித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், இந்த முறை, வாய்மொழிமூல அறிக்கையில், இலங்கை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு வலயத்தில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு எதிராக இதுவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மேலும் சேகரிக்க, கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட 46/1 தீர்மானத்தின்படி, தாம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளமையை தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்கின்றது.

உண்மையில் 2009 இறுதி யுத்தத்தின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் உள்ளக செயற்பாட்டை கொண்ட ஐக்கிய நாடுகள் அலுவலகம், வன்னியில் இருந்து பொறுப்பற்ற முறையில் வெளியேறி தமது கடமையில் இருந்து தவறியது.

இதுபற்றிய ஒரு உள்ளக ஆய்வு அறிக்கை, அப்போதைய சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகளுக்குள் தயாரிக்கப்பட்டு உரையாடலுக்கு உள்ளானது.

இந்த கசப்பான உண்மை தமக்கு தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கைவாழ் தமிழ் மக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபைக்கு, ஒரு கடப்பாடு இருக்கிறது.

அது இன்றுவரை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடர்கிறது.

அதை மனதில் கொண்டு இந்த விவகாரத்தை முன்நகர்த்த வேண்டும்.

இம்முறை, தமிழ்க் கட்சிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு, வெவ்வேறாக கடிதங்கள் எழுதியமை குறித்து தொடர்ந்தும் பேசி முரண்படக்கூடாது.

உண்மையில் இப்படி பல கடிதங்கள் சென்றமை நல்லதே என அவற்றை சாதகமாக பார்க்க வேண்டும்.

அடுத்த வருட கூட்டத் தொடர்களின்போது தமிழ்க் கட்சிகள் ஒருமுகமாக மனித உரிமை பேரவையை அணுகலாம்.

அதற்கான முன்தயாரிப்பு பணிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும்.

மனித உரிமை பேரவை கூட்டங்களின்போது மாத்திரம் திடீரென எழாமல், எவ்வேளையிலும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

எதிர்வரும் ஆண்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து பயணிக்கலாம் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »