கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் விதமாக பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் பணியில் உள்ள அனைத்து இராணுவ வீரர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் பயோஎன்டெக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து இராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ, மத அல்லது நிர்வாக அடிப்படையில் இராணுவ வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விலக்கு கோரலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டாலும் குறிப்பிட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்தால் இடைநீக்கம் அல்லது பணிநீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.