Our Feeds


Saturday, September 18, 2021

Anonymous

காதி நீதி மன்றங்களை நீக்கி நீங்கள் வரலாற்றுத்தவறை செய்யக்கூடாது என்பதே எங்கள் பிரார்த்தனை - காத்தான்குடி ந.சபை உறுப்பினர் சல்மா நீதி அமைச்சருக்கு பகிரங்க கடிதம்


காதி நீதி மன்றத்தைக கலைப்பதானது  முஸ்லிம் பெண் சகோதரிகளைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானது, என  காத்தான்குடி  நகர சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.சல்மா நீதியமைச்சர் அலி சப்ரிக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்


கடந்த 16ம் திகதி அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் சமூகம் சார்பான ஒரே அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் பதவியை அல்லாஹ்தஆலா உங்களுக்கு வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ். 


அதேவேளை தாங்கள் உண்மையிலேயே சமூகம் சார்ந்து நீதியாக நடக்கின்றீர்களா? என்பதை இறைவன் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு ஆத்மீக, ஈமானிய ரீதியாக உணர்த்த விரும்புகின்றோம். 


கௌரவ அமைச்சர் அவர்களே! 

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் டொனமூர், சோல்பரி ஆணைக்குழுக்களில் அன்றைய முஸ்லிம் முன்னோடிகளான M.C. அப்துர்ரஹ்மான், கலாநிதி. T.B. ஜாயா, அறிஞர் சித்திலெப்பை, சேர். ராசிக் பரீட், ஜஸ்டிஸ். அக்பர் போன்ற உன்னத மனிதர்களின் அயராத முயற்சியில் கிடைத்த “முஸ்லிம் தனியார் சட்டம்” அதன் ஒரு பகுதியான MMDA இன்று, தேவையில்லை என்று வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு   எடுப்பார் கைப்பிள்ளையான அவல நிலைக்கு வந்திருப்பதையிட்டு முஸ்லிம் சமூகம் மிகவும் வேதனைப்படுகின்றது. 


முன்னாள் நீதி அமைச்சர்களான கௌரவ ரவூப் ஹகீம், கௌரவ, திருமதி. அத்துகோறலே போன்றோர் காட்டாத முனைப்பையும், ஆர்வத்தையும் தாங்கள் MMDA விடயத்தில் காட்டி, அக்கறையோடு செயற்படும் விதத்தைப் பாராட்டும் அதே வேளை, இஸ்லாமிய மார்க்க, சிவில் நிறுவனங்களுடைய ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் அமைச்சரவையில் தாங்கள் எடுத்த முடிவு ஒருதலைப்பட்சமானதும், முழு முஸ்லிம் சமூகத்தையும் கேவலப்படுத்துகின்ற செயற்பாடாகவும் கருதப்படுகின்றது என்பதை பல முஸ்லிம் அமைப்புக்கள் கவலையுடன் வெளியிட்டுள்ளன.


காதி நீதிமன்றங்கள் மறுசீரமைக்கபபடவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.


அமைச்சரவையின் தீர்மானத்தின் படி காதி நீதி மன்றத்தைக கலைப்பதானது  எமது முஸ்லிம் பெண் சகோதரிகளைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானது, சாத்தியமற்றது என்றே கூறவேண்டும்.


மாவட்ட நீதிமன்றங்களுக்கு தங்களது திருமண பிணக்குகளைக் கொண்டு செல்லும்போது பணத்தேவை, அலைச்சல், அவமானம், துஷ்பிரயோகம், கால தாமதம், உதவி இன்மை போன்ற பலவிதமான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். இது எமது சமூகத்தில் பல சீர்கேடுகள் ஏற்படுவதற்கு ஏதுவாக அமையும். 


இந்த விடயத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழிகாட்டி, இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வது உங்களது தலையாய கடமையாகும். இந்த வரலாற்றுத்தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள், செய்யக்கூடாது என்பதே எங்களது பிரார்த்தனையாகும்.


தலையிடிக்கு தலையணையை மாற்றுவது சரியா? காலுக்கு அணியும் செருப்பு பொருத்தம் இல்லாவிட்டால் செருப்பை மாற்றுவதா? அல்லது காலை வெட்டி வீசுவதா? போன்ற வாதங்கள் தங்களை நோக்கி முன் வைக்கப்படுவதால் அல்லாஹ்வுக்குப் பயந்து இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.


நன்றி


இவ்வண்ணம்,

M.L.A.சல்மா 

நகரசபை உறுப்பினர்,

காத்தான்குடி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »