Our Feeds


Monday, September 27, 2021

Anonymous

காதி நீதிமன்ற சீர்திருத்தம்; அடிப்படை சட்டத்தில் மாற்றங்கள் நிகழப் போவதில்லை என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்தவின் இணைப்புச் செயலாளர்



காதி நீதிமன்றத்தில் பாரிய மாற்றங்களோ அடிப்படையிலான சட்டத்தில் மாற்றங்களோ வரப்போவதில்லை. மாறாக காதி நீதிமன்றங்களில் விசாரணையின் போது அநீதி இழைக்கப்படும் என்ற சந்தேக உணர்வு தோன்றும் பட்சத்தில் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய முஸ்லிம் விவாக விவாரகத்துச் சட்டத்தில் இயலாத ஒன்றைப் பெற்றுக் கொடுக்கவே முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்று யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினரும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் இணைப்புச் செயலாளருமான வசீர் முக்தார் தினகரனுக்கு வழங்கிய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.


கேள்வி: முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் குறித்து இலங்கையில் சமீபகாலமாக சூடான களநிலவரம் காணப்படுகிறது. இது தொடர்பில் நீங்கள் கூறும் கருத்து?


பதில்: குர்ஆன், சுன்னா அடிப்படையில் தான் உலக முஸ்லிம்களுடைய வாழ்க்கை முறை இருக்கிறது. நாடுகளுக்கிடையே வித்தியாசங்கள் காணப்பட்டாலும் கலாசார மார்க்க விடயங்களில் வித்தியாசம் காண முடியாது. திருமணம் என்பது மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயம். குர்ஆன், ஹதீஸ் சம்பந்தப்பட்ட விடயம்.


பொறுமையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவதன் மூலமே இந்த விவாகம் விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தத்திற்கான ஓர் நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்க முடியும். இது தவிர்த்து ஒருவரை ஒருவர் விமர்சிப்பதன் மூலம் இது தொடர்பில் எமது எதிர்கால சந்ததியினருக்கு நிரந்தரமான தீர்வை உடன் பெற்றுக் கொடுக்க இயலாது.நாகரிகமானதும் பண்பட்டதுமான சமுதாய இருப்புக்கு இந்த விவகாரம் விரைவில் சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.


கேள்வி: இலங்கை காலனித்துவ ஆட்சியிலும் சுதேச மன்னர்களுடைய ஆட்சியிலும் இஸ்லாமிய சட்டங்கள் தொடர்பில்,..


பதில்: இலங்கைக்கும் அரபியர்களுக்கும் இடையே தொடர்பு சுமார் 2500 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்தது. அவ்வாறுதான் இலங்கையில் இஸ்லாத்தின் தொடர்பு சுமார் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அரேபிய வர்த்தகர்களின் தொடர்பு இலங்கை முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


கி. பி. 7 ஆம். நூற்றாண்டில் சிறு அளவிலான வர்த்தக நோக்கில் அரேபிய குடியேற்றங்கள் இலங்கையின் முக்கிய துறைமுக மற்றும் கரையோர நகரங்களில் இருந்துள்ளன. அவர்கள் சுயதேசிய பெண்களை திருமண முடித்து கரையோர நகரங்களில் வாழ்ந்ததன் ஊடாகவும் முஸ்லிம் சமுதாயம் இலங்கையில் உருவானது. இஸ்லாமிய முறைமையினை தமது தனித்துவமாகவும் அடையாளமாகவும் முன்னிலைப்படுத்தி இந்த திருமணங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கை வரும் முன்னரே கரையோரப் பிரதேசங்களில் ஒரு பிரத்தியேகமான நீதி மன்றம் காணப்பட்டதற்கான சான்றுகள் எஸ். ஜீ. பெரேரா 1947 ல் எழுதி வெளியிட்ட 'த இஸ்ட்ரி ஒப் சிலோன்' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான தனியார் சட்ட ஒழுங்குகள் காணப்பட்டன. இலங்கையைக் கைப்பற்றி காலனித்துவ ஆட்சியை மேற்கொள்ளளும் முன்னர் இருந்தே முஸ்லிம் சமூகத்திற்கான தனியார் சட்டம் ஒழுங்குகள் பின்பற்றப்பட்டுள்ளன. அது தொடர்ந்து முறையாக இருந்து வந்துள்ளது. முதல் சட்டம் ஒல்லாந்தர் காலத்தில் 1803 ஆம் ஆண்டில் முஹம்மதிய்யன் கோவை திருமணச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இது இந்தோனேசியாவில் பின்பற்றப்படும் சட்ட வரையறைகளைக் கொண்டதாகும்.


1929 இல் முஸ்லிம் மெரேஜ் விவாகம் விவாகரத்து பதிவு செய்தல் என்ற சட்டம் மூலமாக்கப்பட்டது. 1924 களில் மிஸ்கீன் உம்மாவின் ஒரு முக்கியமான வழக்கு ஒன்று பேசப்பட்டது. ஜஸ்டிஸ் அக்பர் இதனை முன்னெடுத்தார். அந்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் பிரித்தானிய அரசாங்க காலத்தில் மார்க்கான் மரைக்கார், டீ. பி. ஜாயா ஆகியவர்களின் வழிகாட்டலுடன் ஜஸ்டிஸ் அக்பர் தலைமையில் ஒரு குழுவொன்றை நியமித்தனர்.


அப்பொழுது முஹம்மதிய்யன் கோவை இருந்தது. அந்தக் குழுவினரேதான் காதி நீதிமன்றம் உருவாக்குவதற்கான கோரிக்கை யொன்றை முன்வைத்தார்கள். அதன் பின்னர் 1926 களில் அதற்கான சீர்திருத்தக் குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டது. 1929 ல் முஸ்லிம் விவாகம் விவாகரத்துப் பதிவு செய்தல் சட்டம் மூலமாக்கப்பட்டது,


அதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைக்கு வரும் கால கட்டத்தில் சுதந்திரத்திற்குப் பின்பு 1951ல் பாராளுமன்றத்தில் சட்ட மூலமாக இணைக்கப்பட்டது. எனினும் 1954 ல் தான் இது இயங்க ஆரம்பித்தது. பொதுவான விவாகப் பதிவுச் சட்டம் 1907 ஆம் ஆண்டு பிரித்தானிய காலத்தில் உருவாக்கப்பட்டாலும் முஹம்மதிய்யன் கோவை முஸ்லிம்களுக்கு இருந்தமையால் பொதுவான விவாகப் பதிவுச் சட்டம் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கவில்லை.


கேள்வி: மிஸ்கின் உம்மா சம்பவத்தை வினைத் திறனாக உள்ளீர்த்து தனித்துவமான இஸ்லாமிய சட்டத்தை தேசிய ரீதியில் அங்கீகாரத்தையும் பலத்தையும் உருவாக்கிய அந்த வழக்குச் சம்பவம் பற்றிக் கூறுவீர்களா?


பதில்: ஒரு முஸ்லிம் பெண் விவாகம் செய்கிறார். அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றவர் சில வருடம் காலம் வரவில்லை. அவருடைய தகவல்கள் எதுவுமே கிடைக்கவில்லை. இந்தப் பெண்ணின் குடும்பம் அந்தக் கணவனை (தலாக்) விவாகரத்துச் செய்ய வேண்டும். அல்லது (பஸஹு) விடுவிக்க வேண்டும்.


எவ்வாறாயினும் இரண்டாவது திருமணம் முடிக்க வேண்டும் எனில் கணவர் மரணம் எய்த வேண்டும். அல்லது (தலாக்) விவாகரத்துச் செய்ய வேண்டும். ஏதாவது ஒன்று நடக்க வேண்டும். இல்லையேல் மறுமணம் முடிக்க இயலாது.


இதற்கான சட்டம் ஒன்றைத் தேடினார்கள். இப்படி தேடும் போது தான் இந்தியாவிலிருந்து இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் இலங்கை வந்தார். அறிஞரிடம் அறிவுரை கேட்டார்கள். அப்பெண்மணி அக்கணவரை விடுத்து (பஸஹ்) இன்னுமொரு திருமணம் முடித்து கொள்ளலாம் என்று அந்த மார்க்க அறிஞர் சட்ட விளக்கம் வழங்கினார். அதற்கு இணங்க அப்பெண்மணி இன்னுமொரு திருமணம் ஒன்றை முடித்துக் கொண்டார்.


ஆனால் வெளியே சென்ற அந்தக் கணவர் மீண்டும் திரும்பி வருகின்றார். அப்பொழுது அந்த பெண்மணி இரண்டாவது திருமணம் முடித்திருந்தார். முதல் கணவர் இருக்க எப்படி இன்னுமொரு திருமணம் முடிக்கலாம் என்று பழைய கணவர் இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.


இந்த வழக்கில் இரண்டாவதாக முடித்த திருமணத்தை இரத்து செய்து விட்டதாக நீதி மன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இது தொடர்பில் ஜஸ்டிஸ் அக்பர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்து அந்த பெண்மணி இரண்டாவது திருமணம் முடித்தது இஸ்லாமிய சட்டப்படி சரியானது என வாதிவிட்டு வழக்கில் வெற்றி பெறுகின்றார்.


இஸ்லாமிய சட்டப்பிரகாரம் நடைபெற்ற திருமணம். இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் குறித்த திருமணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் தான் முதல் திருமணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பொதுவான சட்ட திட்டத்தின் கீழ் இந்த விவாக விவாகரத்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்ற கருத்தை முன்வைத்து வாதிட்டதில் தேசிய ரீதியில் இஸ்லாமிய சட்டத்திற்கு ஆதரவான தளம் உருவாக்கப்பட்டது.


அதற்குப் பின்னர் 1951 ல் சுதந்திரத்திற்குப் பின்னர் இதில் சில தேவையான சீர்திருத்தங்களுடன் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத்தில் முதல் முதலாக காதிமார்களையும் காதி சபையையும் உள்துறை அமைச்சின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமூலமாக்கப்பட்டது. இது 1954 ம் ஆண்டுகளில் தான் நடைமுறைக்கு வருகிறது,. இந்த சீர்திருத்தங்களின் போதும் அடிப்படை விடயங்களில் யாருமே கைவைக்கவில்லை. 70 வருடமும் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார்கள். எல்லோரும் இருப்பதைத்தான் மாற்றியமைத்தார்கள்.


கேள்வி: முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த விவகாரம் தொடர்ச்சியாக ஸ்திரமற்ற விடயமாகவும் தற்காலத்தில் இது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அரசியல் நாடகமாக அரங்கேற்றப்படுகிறதா அல்லது ஏதாவது ஒன்று நடக்குமா?


பதில்: யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அநியாயங்கள் நடக்காத முறையில் காதி நீதிமன்றங்கள் இயங்குவதற்கான சீர்திருத்தங்கள் வருதல் அத்தியாவசியமானதாகும். ஏனென்றால் நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் குர்ஆன் ஹதீஸ்களுக்கு மாறாக செயற்பட முடியாது. உண்மையிலேயே சீர்திருத்தம் அவசியம். ஆனால் அந்த சீர்திருத்தம் குர்ஆன் ஹதீஸின் பிரகாரம் முஸ்லிம்கள் பின்பற்றக் கூடிய உரிமைகளைத் தான் கொண்டிருக்கும். அது பலதார திருமணமாக இருக்கலாம். விவாகரத்து தொடர்பாக இருக்கலாம். இவை அனைத்து குர்ஆன் சுன்னாவுக்கு உட்பட்ட விடயம்.


இந்த நாட்டின் நிரந்தரக் குடி மக்களாகிய முஸ்லிம் சமூகத்திற்கு எந்த அரசாங்கம் இருந்தாலும் முஸ்லிம்களுடைய தனித்துவமான உரிமைகளை வழங்குவது இந்த நாட்டினுடைய கடமை. முஸ்லிம் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் தங்களது தனித்துவமான வரையறைகளுக்கு உட்பட்டு வாழ்வதற்கான உரிமையினை இலங்கையின் அரசியல் யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.


சீர்திருத்தமானது முஸ்லிம்களுடைய நலனைக் கருத்திற் கொண்ட மாற்றங்கள் கொண்டு வரப்படுதல் வேண்டுமே தவிர ஏனைய சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களுக்கோ அவர்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கோ அரசியல் ரீதியிலான தேவைகளுக்கோ மாற்றம் செய்ய முடியாது.


எவ்வாறாயினும் அமைச்சர் அலி சப்ரியின் காலத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகம் இல்லாமல் காதி நீதிமன்றங்கள் சிறந்த முறையில் செயற்பட வழிகோலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது.


கேள்வி: முஸ்லிம் விவாகம் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரின் முன்னெடுப்புக்கள் பற்றிக் கூறுவீர்களா?


பதில்: நான் அவருடன் மிக நெருக்கமான தொடர்பினை வைத்திருக்கின்றேன். அரசியல் தொடர்புகளுக்கு முன்னர் இருந்தே சமூக சார்ந்த விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்பட்டவன் என்ற வகையில் அவருடன் நெருக்கமான உறவு இருந்து வருகிறது.


நான் எந்த கட்சிக்கு அதரவளிக்கின்றேனோ அவரும் அந்தக் கட்சியில் அமைச்சராக இருக்கிறார். அரசியல் ரீதியாகவும் அவருடன் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இது சம்பந்தமாக உரையாடியவன் என்ற அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பில் அவர் பற்றி சமூக ஊடகங்களின் வெளிவரும் விமர்சனங்கள் உண்மைக்கும் புறம்பானவையாகும்.


நாங்கள் வாழக் கூடிய இன்றைய சூழல் சிறுபான்மையின முஸ்லிம் சமூகம் என்ற வகையில் ஒரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நாங்கள் பெற்றுக் கொண்ட உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் சலுகைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் தூர நோக்குடன் சிந்தித்து பொறுமையான காய் நகர்த்தல்களைச் செய்தால் மாத்திரம் தான் எதிர்கால சமூகத்திற்கு இந்த விடங்களைப் பாதுகாத்து நாங்கள் அவர்களின் கையில் ஒப்படைக்கலாம்.


ஒரு காலத்தில் எமது மூதாதையர்கள் பெற்றுத் தந்த சலுகைளையே தான் இன்று நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களால் தான் 100 வருடங்கள் சென்றும் அவற்றைப் பின்பற்றி நடந்து கொண்டிருக்கின்றோம்.


அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது.


இந்த நாட்டின் கடந்த 4 தசாப்பாத அரசியல் சூழல் இனவாத முரண்பாட்டைக் கொண்டது. அது உச்ச நிலை அடைந்துள்ளது.1956 களில் இருந்து இனவாத கட்சி அரசியல் இருக்கிறது.சிங்கள, தமிழ் முரண்பாடாக இருக்கலாம், சிங்கள, முஸ்லிம் முரண்பாடாக இருக்கலாம், தமிழ், முஸ்லிம் முரண்பாடாக இருக்கலாம். இவை எல்லாம் அரசியல் ரீதியாக அரங்கேற்றப்பட்டு சமூகங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் காய் நகர்த்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


1980 களில் இருந்து 2009 வரையிலும் சிங்கள, தமிழ் முரண்பாடு தோற்றம் பெற்றிருந்தது. 2010 ல் இருந்து இன்று வரையிலும் சிங்கள, முஸ்லிம் முரண்பாட்டை மையமாக வைத்து அரங்கேற்றப்பட்ட இனவாத செயற்பாட்டை முன்வைத்துத் தான் இந்த நாட்டினுடைய அரசியல் ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது.நாங்கள் எமது முதாதையர்கள் பற்றி பெருமை பேசினாலும் எங்களைப் பற்றி அடுத்து வரும் சந்ததியினர் எதிர்காலத்தில் பெருமை பேச வேண்டும்.அந்த அடிப்படையில் அமைச்சர் அலி சப்ரி தூரநோக்குடன் எதிர்கொள்ளக் கூடிய அனைத்து சவால்களையும் நிதானமான முறையில் முறியடிப்பதற்கான சகல முயற்சிகளையும் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


கேள்வி: ஆனால் இவ்விடயம் இவ்வளவு காலமும் இழுபறி நிலமை ஏற்படுவதற்கான காரணம் என்ன?


பதில்: 2008 ஆம் ஆண்டில் மிலிந்த மொரகொடவினால் நீதியரசர் மர்சூக் தலைமையில் நியமிக்கப்பட்ட சீர்திருத்த குழு அறிக்கை 10 வருடங்களுக்கு பின்னர் தான் ஆவணமாக கொண்டு வரப்பட்டது. அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டு முன் வைக்கப்பட்டாலும் அந்தக் குழு முரண்பட்டு இரு தரப்பினர்களாகப் பிரிந்தனர்.


அது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையிலும் நீதியரசர் மர்சூக் தலைமையிலும் இரு குழுக்களாகப் பிரிந்தனர். இந்த இரு தரப்பினர்கள் தயாரித்த சீர்திருத்த சட்டவரைபுகள் அன்று நீதி அமைச்சராக கடமையாற்றிய தலாதா அத்துகோரளவுக்கு கையளிக்கப்பட்டது.


இந்த சந்தர்ப்பத்தில் அன்றைய நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள். அவர்கள் இருந்தும் கூட அதற்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்க இயலாத நிர்ப்பந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.காரணம் சமூகத்தில் இரு தரப்பினர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு பிளவுகள் உருவானதால் அவர்களுக்கு ஒரு தீர்மானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது இருந்தது.


துரதிஷ்டவசமாக 2019 ல் ஈஸ்டர் தாக்குதல் ஏற்பட்டதால் முஸ்லிம்களுக்கு எதிர்பாராமல் பாரிய சோதனை ஏற்பட்டது. இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் தக்கவைத்துக் கொண்டு வந்த நம்பிக்கை கௌரவத்திற்கு பாரிய அடி வீழ்ந்தது.அந்த தாக்குதல் கடும் போக்குவாதிகளுக்கு தீனி போட்டமாதிரி இருந்தது. அதைத் தொடர்ந்து எமது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்கள் அதிகம்.


அதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பல சீர்திருத்தங்களை எதிர்பார்த்து தேசிய பாதுகாப்புச் சம்பந்தமான ஒரு குழுவினை நியமனம் செய்தனர்.


17 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவில் எல்லாக் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். இந்த நாட்டின் பாதுகாப்புச் சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்திற்குள் வரக் கூடிய மாற்றங்கள் குறித்து தீர ஆராயப்பட்டது. அந்தக் குழுவின் இறுதி அறிக்கை 19-02-2020 சமர்ப்பிக்கப்பட்டது.


அந்த அறிக்கையில் ஒரு முக்கிய அம்சமாக காதி நீதிமன்றம் முற்றாக ஒழிக்கப்பட்டு ஏனைய தனியார் சட்டங்கள் போல் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட விடயங்கள் பொது நீதி மன்றத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏகமனதாக முஸ்லிம் பிரதிநிதிகளும் ஆமோதித்து கையொப்பிட்டிருந்தார்கள்.


அன்று இருந்த களநிலவரத்தால் கையொப்பம் இட வேண்டிய சூழ்நிலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் என நான் கருதுகின்றேன். ஆனாலும் இது ஒரு கவலையான விடயம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே ஏதோ ஒரு அடிப்படையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு இந்தத் தீர்மானங்கள் பரிந்துரைக்கு முன் செயற்படாமல் விட்டதை நான் ஒரு குறைபாடாக கருதுகின்றேன்.


அந்நேரத்தில் அதனை நிவர்த்தி செய்திருந்தால் இன்றுள்ள பல அழுத்தங்களைக் தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்.இவ்வாறான பல சவால்களை சுமந்து கொண்டு தேசிய பட்டியல் நியமன அமைச்சர் என்றும் பாராமல் சமூகத்திற்கு வரக் கூடிய சவால்களை உள் இருந்து முறியடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் அலிசப்ரி செயற்படுகின்றார்.


கேள்வி: காதி நீதிமன்ற முறைமை எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றை விருத்தி செய்து கொள்வதற்கான தேவைப்பாடுகள் குறித்து கூற முடியுமா?


பதில்: காதி முறைமை முற்றாக நீக்கப்படும் என்பது சித்திரிக்கப்பட்ட செய்தியாகும். காதி முறைமை முற்று முழுதாக நீக்கப்படப்போவதில்லை.


இதில் முஸ்லிம் பெண்கள் ஏதோ ஒரு அடிப்படையில் சில இன்னல்களுக்கு உட்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம் பெண்கள் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமூகமாக உள்ளனர் என நான் கருதுகின்றேன். எல்லா முஸ்லிம்களும் இதனைப் பாரபட்சமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.


இதில் எல்லாக் காதிகளையும் குற்றம் சுமத்த நான் விரும்பவில்லை. சில காதிமார்களுடைய நடவடிக்கைகளால் எமது சமூகத்தின் முஸ்லிம் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டு அநாதையாக்கப்படுகின்றனர். வார்த்தை துன்புறுத்தலுக்கும் உட்பட்டவர்களாக உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி 2000 வழக்குகளை எடுத்து ஆய்வுகள் செய்துள்ளார். தற்போதைய காதி நீதிவான்கள் குறைந்தளவிலான கொடுப்பனவே பெறுகின்றனர்.ரூபா 15,000 வரைதான் உள்ளன.அமைச்சர் அலி சப்ரி அதனை 50,000 ரூபாவாக அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.அத்தோடு தகைமை வாய்ந்தவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என சில திட்டங்களையும் வகுத்துள்ளார்.


காதி நீதிமன்ற மேம்பாட்டுக்காக புதிய சொல்வடிவத்தையும் அறிமுகம் செய்யலாம். கடந்த காலங்களில் இந்நாட்டில் ஹலால் பிரச்சினை இருந்தது. அன்று இருந்த இலட்சினை இல்லை இன்று. அது எச். ஏ. சி என்ற பெயரில் தொடர்ந்து இயங்கி வருகிறது. முன்னர் அரபு எழுத்தில் ஹலால் என்று இருந்தது.


சிலவேளை சில சொற்பதங்கள் மாற்ற வேண்டிய நிலைமை வரலாம். களநிலவரத்தைப் பொறுத்தவரையில் சொற்பதங்களில் சில மாயைகளை உருவாக்கக் கூடிய வகையில் மாற்றங்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.சீர்திருத்தத்தின் ஊடாக நூற்றுக்கு நூறு விகிதம் எந்த மாற்றங்களும் நடைபெறாது என்பது நான் அறிந்த வரையில் தெரிவிக்கின்றேன்.


கேள்வி: காதிநீதிமன்றங்களில் எவ்வாறான சீர்திருத்தங்கள் வரலாம் ?


பதில்: பெண்கள் விவாகரத்தை கோரும் போது அவர்களுக்கு சரியாக நீதி கிடைக்காத சந்தர்ப்பத்தில் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். அதே போன்று ஆண்களுக்கும் உண்டு.


இந்த இரு தரப்பினர்களுக்கிடையே காணப்படும் பிணக்குகள் எல்லாம் நூற்றுக்கு நூறு இந்த காதி நீதி மன்றங்கள் ஊடாகத் தான் தீர்க்கப்படும். ஆனால் இரு தரப்பினர்களுக்கிடையே தொடர்ந்து தமது வாழ்க்கையில் ஒன்றாகப் பயணிப்பதற்கான சமரசம் காணாத பட்சத்தில் அல்லது இரு சாராருக்குமிடையே இணக்கப்பாடு காண்பதில் இயலாமை போகுமானால் மாவட்ட நீதி மன்றத்திற்கு முன் வைக்கப்படும்.


அங்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் பிரகாரம் தான் மனுக்கள் விசாரணைக்காக முன்னெடுக்கப்படும். பொது நீதிமன்ற சட்டத்தின் கீழ் எமது வழக்குகள் விசாரணைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன்.


எவ்வாறாயினும் மாவட்ட நீதிமன்றத்திற்கு 10 விகிதத்திற்கு குறைவான வழக்குகள் தான் அங்கு செல்லும். குறிப்பாக அந்த வழக்குகள் அங்கு செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாவே இருக்குமெனக் கருதுகின்றேன்.


பராமரிப்பு, கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, நிதி உதவி போன்ற விடயங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமை இருந்தால் காதி நீதிபதியின் அனுமதியுடன் மாவட்ட நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். நஷ்டஈடு (மதா) என்ற விசயம் இன்றுள்ள காதி முறையில் இல்லை. இதனால் தான் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.


குறித்த பெண்ணை எந்தவிதமான காரணமும் இல்லாமல் விவாகரத்துச் செய்தால் அந்தப் பெண் எதைக் கேட்கின்றாரோ அதனைக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இது ஆண், பெண் இருவருக்கும் சமனாக அமையும். இதன் மூலம் இரு தரப்பினர்களும் நஷ்டஈடு பெற்றுக் கொள்ள இயலுமாகும். காதி நீதிமன்றத்தில் இதற்கான பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை எனில் மாவட்ட நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.


இன்று காரசாரமாக பேசப்படும் காதி நீதி மன்ற முறைமையில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சில காதிமார்களின் தவறுகளினால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அநியாயம் நடக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கென எடுக்கும் முன்னெடுப்பாகவே இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது.


இதனை அமைச்சர் அலி சப்ரியின் காலத்தில் செய்யாவிட்டால் வேறு எவராலும் செய்ய முடியாது எனக் கருதுகின்றேன். சுமார் 70 வருட காலமாக இதில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக முயற்சிகள் செய்கின்றோம்.அவருடைய காலத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே மாற்றங்களை செய்யலாம் ஏன்னென்றால் நீதி தொடர்பில் நன்கறிந்தவர் என்பதால். இந்த காதி முறைமை தொடர்பில் எந்தவிதமான சந்தேகங்களையும் வைத்துக் கொள்ள வேண்டாம். அமைச்சருக்கு எதிரான விமர்சனங்களையோ தேவையற்ற கட்டுக்கதைகளையோ பரப்புகின்ற நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என நான் தயவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.


குர்ஆன் சுன்னாவுக்கு மாறாக நடைபெறுமாயின் நாங்களும் முன்னின்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோம். ஆனாலும் இது சம்பந்தமான தெளிவூட்டல்களைப் பெற்றுக் கொள்வது அவசியம். இது பற்றி சரியான தகவல்கள் இல்லாமை காரணமாக திரிவுபடுத்தப்பட்ட தகவல்களை முன்வைத்து விமர்சனங்கள் செய்கின்றனர்.


இதனை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் இதன் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் இருக்க வேண்டும். முழுமையாக இந்த முறைமை ஒழிக்கப்படமாட்டாது.


ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் கூட பெப்ரவரி 12 ஆம் திகதி அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரையில் அவரது உறுதியான கருத்தை தெளிவாக முன்வைத்தார். அந்த நிலைப்பாட்டில் தான் அவர் இன்றும் இருக்கின்றார்.


அவர் இந்தப் பதவில் இருக்கும் வரையிலும் எந்த சமூகத்திற்கோ வேறு இதர சிறுபான்மை சமூகத்திற்கோ எமது தேசத்திற்கோ எந்தவிதமான பாதகங்களும் வராது என்ற அடிப்படையில் தான் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.


இதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


கலந்துரையாடல்: இக்பால் அலி


தினகரன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »