Our Feeds


Friday, September 24, 2021

SHAHNI RAMEES

கைதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு விடுதலை ?


 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள

விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிவித்துள்ள வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், 2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் பக்க அம்சமாக, இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பொன்றை புதன்கிழமை (22) நடத்தியிருந்தார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்தும் இந்தியாவுக்கு விளக்கமளித்துள்ளார்.
காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விளக்கப்படுத்தினார்.

இது போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனையும் எடுத்துரைத்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பகுதிகளில் முன்னேறுதற்காக வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் அந்த நாடுகளின் அனுமதியின்றி செயற்படுத்தப்பட முடியாது என்ற அடிப்படையில் இலங்கை எடுத்த கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, பல நாடுகளை பெரிதும் ஊக்குவித்தன என்பதை சுட்டிக்காட்டி, வலுவான உள்நாட்டுப்
பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »