கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி பொலிஸர், கொழும்பு தெற்கு குற்ற விசாரணை பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், அவரே குண்டு தொடர்பில் முதல் தகவலை அளித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், முன்னெடுத்த விசாரணைகளில் அவரே குண்டை குறித்த இடத்துக்கு எடுத்து வந்தமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நிர்மாண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனம் ஒன்றின் ஊழியரான சந்தேக நபர், குறித்த வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் நிர்மாண பணிகளுக்காக அங்கு கடந்த 12 நாட்களுக்கு முன்னர் வேலைக்கு வந்தவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் குண்டை எடுத்து வந்த நோக்கம் தொடர்பில் விசேட விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக குறித்த வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிவறை ஒன்றில் வெளிப்புறத்துக்கு தெளிவாக தெரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (14) இந்த குண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.