Our Feeds


Tuesday, September 28, 2021

Anonymous

அமைச்சர் கம்மன்பிலவின் மனைவி, அமைச்சருடன் ஈரான் சென்று ஹிஜாப் அணிந்தாரா? - சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை அவர் தற்போது முன்னெடுத்துள்ளார்.


இதன்போது ஐக்கிய அரபு இராச்சியம், ஈரான் மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் உதய கம்மன்பில விஜயம் செய்து அந்நாடுகளின் பெற்றோலிய வளத் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றார்.


இந்த சந்திப்புக்கள் அனைத்திலும் வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்காவும் பங்கேற்றிருந்தார். இந்த விஜயம் தொடர்பான விபரங்களை அமைச்சர் உதய கம்மன்பில, தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.


கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி வெளியான மவ்பிம பத்திரிகையில் இந்த விஜயம் தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. "மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைச்சர் உதய கம்மன்பிலவின்  உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்காவும் பங்கேற்கின்றார்" என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வாறன நிலையில், குறித்த விஜயம் தொடர்பான பிழையான தகவலொன்று நேற்று (27) திங்கட்கிழமை முதல் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


அதாவது – "அமைச்சர் உதய கம்மன்பில அவரது மனைவியுடன் ஈரான் சென்றதாகவும், அங்கு அவரது மனைவி தலையில் ஹிஜாப் அணிந்ததாகவும்" சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


மேற்படி விடயம் குறிப்படப்பட்ட புகைப்படம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஈரானிய எரிபொருள் நிலைய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இதில் காணப்படும் இலங்கைப் பெண்மனி வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்கா ஆவார்.


எனினும், அமைச்சின் செயலாளரை அமைச்சர் உதய கம்மன்பிலவின் மனைவி எனக் பிழையாக குறிப்பிட்டு பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


குறித்த புகைப்படம், அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ பேஸ்புகில் வெளியிடப்பட்டுள்ளதுடன் குறித்த சந்திப்பில் வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர் ஒல்காவும் கலந்துகொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் இதுபோன்று வெளிநாடுகளில் இடம்பெறும் உத்தியோகபூர்வ சந்திப்புக்களின் போது அமைச்சர்களின் உறவினர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை என்பது பாரம்பரியமாகும். அது மாத்திரமல்லாமல் ஈரானிற்குள் நுழையும் அனைத்து பெண்களும் இன, மத, சாதி, என்ற வேறுபாடின்றி தலையினை மூட வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும்.


இவ்வாறான நிலையில், அமைச்சர் உதய கம்மன்பிலவின் குறித்த சந்திப்புக்களில் இடம்பெற்றதாகவும் அதில் அவர் ஹிஜாப் அணிந்ததாகவும் பிழையான தகவல் பரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (நன்றி: விடியல்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »