Our Feeds


Thursday, September 30, 2021

Anonymous

இது தான் பிரச்சினை! நான் கைச்சாத்திடப் போவதில்லை – உதய அதிரடி



கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் 40 வீதத்தை வழங்குவதன்றி, இலங்கைக்கு ஐந்து வருடத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் சர்வாதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதே பிரச்சினைக்குரியது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


மேற்படி உடன்படிக்கையை தயாரிக்கும்போது அமைச்சு இரண்டு மதிப்பீடுகளை பெற்றுக் கொடுத்துள்ளது. அத்துடன் மேலும் ஒரு மதிப்பீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர்,


நாட்டிற்கு பாதகமான எந்த ஒரு உடன்படிக்கையிலும் தாம் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் என்ற வகையில் ஒரு போதும் கையொப்பமிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


எரிசக்தி அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:


நியூ போட்ரஸ் வலு நிறுவனம் 2023ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கே எரிவாயு விநியோக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.


இந்த வருட இறுதியில் ஏலம் நடத்தப்பட்டால் அதிலிருந்து மூன்று வருடங்களில் எமது நாட்டில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.


எனினும் எமது மின்சார உற்பத்தி நிலையத்திற்கு 2028 ஆம் ஆண்டு வரை அமெரிக்க நிறுவனம் எரிவாயுவை வழங்குமானால் இலங்கையில் எரிவாயுவை அகழ்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பதற்கு அது தடையாக அமையலாம்.

அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெற்றோலிய வள அமைச்சிற்கு அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் நாம் எழுத்து மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளோம்.


யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தை வழங்குவது அல்ல இலங்கைக்கு ஐந்து வருடத்திற்கு எரிவாயு விநியோகிக்கும் சர்வாதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதே பிரச்சனைக்குரியது.


அத்துடன் டென்டர் செயற்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் எரிவாயு விடயம் தொடர்பில் அனுபவம் உள்ளவர்கள் எமது அமைச்சிலேயே உள்ளனர் எனினும் உடன்படிக்கை மேற்கொள்ளும் எந்த குழுவிலும் எமது அமைச்சின் பிரதி நிதிகள் உள்ளடக்கப்படவில்லை.


அனுபவம் உள்ளவர்கள் எமது அமைச்சில் உள்ள நிலையில் அது தொடர்பில் அமைச்சரவைக்கு 2 மதிப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு மதிப்பீடும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனினும் எரிவாயு உடன்படிக்கை எந்தளவு காலம் பேசப்பட்டது என எனக்குத் தெரியாது.

எவ்வாறெனினும் எமது நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் தான் கையொப்பமிடப் போவதில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »