சதொச நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட சுமார் 150 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 56 ஆயிரம் கிலோ இரு வெள்ளைப் பூண்டு கொள்கலன்களை, உயர் அதிகாரிகளின் எந்த அனுமதியும் இன்றி, மூன்றாவது தரப்பொன்றுக்கு விற்பனை செய்தமை தொடர்பில், ச.தொ.ச. தலைமையகத்தின் பிரதி பொது முகாமையாளர் ( நிதி) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்த இந்த விவகாரம் குறித்த விஷேட விசாரணைகளில், அனுர சிசிர பெரேரா எனும் குறித்த பிரதி பொது முகாமையாளர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். அவரை இன்று (16) திகதி வத்தளை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்த நிலையில், அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய, சதொச அதிகாரிகள் நால்வர் உடனடியாக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதுடன் அவர்கள் நேற்று பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சதொச தலைமையகத்தின் பிரதி பொது முகாமையாளர் (நிதி) உள்ளிட்ட மூவரும் வெலிசறை களஞ்சியத்தின் அதிகாரி ஒருவருமே பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, சதொச அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பேலியகொடை பொலிஸார் பிரதி பொது முகாமையாளரை ( நிதி) கைது செய்து மன்றில் ஆஜர் செய்தனர். அதன்படியே அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.