Our Feeds


Friday, September 24, 2021

Anonymous

2,000 பெண்களின் ஆடைகளைத் துவைக்க வேண்டும் - நீதிபதியின் அதிரடி உத்தரவு!



இந்திய பீகார் மாநிலம் மதுபானி (Madhubani) மாவட்டத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றவருக்கு 2,000 பெண்களின் ஆடைகளை இலவசமாகத் துவைத்துக் கொடுக்கவேண்டும். என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுபானி  மாவட்டத்தில் உள்ள லுகாஹா என்ற இடத்தில் வசிப்பவர் லாலன் குமார். இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி இரவு அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மறுநாள் காலை அப்பெண் பொலிஸில் புகார் செய்தார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து லாலன் குமாரை கைது செய்தனர். லாலன் குமார் தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று கோரி ஜான்ஜன்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி அவினாஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பிணை வழங்க நீதிபதி புதிய நிபந்தனை ஒன்றை பிறப்பித்துள்ளார். பிணையில் வெளியில் சென்றதும் லாலன் குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள 2000 பெண்களின் ஆடைகளை இலவசமாகத் துவைத்துக் கொடுக்கவேண்டும். இந்த பணியை 6 மாதத்தில் செய்து முடிக்கவேண்டும். லாலன் குமார் பெண்களின் துணியை துவைப்பதை உறுதி செய்யும்படி கிராமத் தலைவர் நஜிமாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாலன் சிறையில் மிகவும் ஒழுக்கமாக இருந்ததோடு, நடந்த சம்பவத்திற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து நஜிமா கூறுகையில், “கோர்ட் தீர்ப்பு மிகவும் சிறந்தது. இத்தீர்ப்பு பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுக்கும். அதோடு பெண்களுக்கு எதிராக மனநிலையில் இருப்பவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும். துணியை துவைப்பதற்கு தேவையான சோப்பு, சலவை தூள் போன்றவற்றை வாங்கும் பொறுப்பு லாலனை சேர்ந்தது. லாலன் செய்யும் பணியை தினமும் கவனிப்பேன். எங்கள் கிராமத்தில் 225 பெண்கள் இருக்கின்றனர். இப்பெண்கள் சுழற்சி முறையில் தங்களது ஆடைகளை லாலனிடம் துவைக்க கொடுப்பார்கள். 6 மாத பணி முடிந்த பிறகு லாலன் பணி குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வேன்” என்று தெரிவித்தார்.

நன்றி : விகடன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »