(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் ‘ என் சாவுக்கு காரணம் ‘ என்று எழுதப்பட்டுள்ளமை விசாரணைக் குழுவினரால் இனங்காணப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அர்த்தம் கிடைக்கப்பெறும் வகையில் காணப்படும் இந்த வசனம் சிறுமி ஹிஷாலினியால் எழுத்தப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் உபயோகித்த பாடப் புத்தகங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில , முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை குழுக்களால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் சுவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அர்த்தம் கிடைக்கப் பெறும் வகையில் (தமிழ் மொழி பேசுபவர்கள் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பெருமளவில் உபயோகிக்கும் மொழிநடையில்) , ‘ என் சாவுக்கு காரணம் ‘ என்று எழுத்தப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இவ்வாறு எழுதப்பட்டுள்ள சுவர், புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பகுதி திங்கட்கிழமை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கையெழுத்து தொடர்பான விசேட நிபுணர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பாடசாலை சென்றபோது உபயோகித்த பாடசாலை புத்தகங்கள் சில பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சிறுமி வசித்த அறையின் சுவரில் எழுதப்பட்டிருந்த வசனம் அவரால் எழுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறு பாடப் புத்தகங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மூவரடங்கிய விசேட நீதிமன்ற மருத்துவ குழுவினால் இரண்டாவது பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கை வழங்கப்படவுள்ளது. அத்தோடு குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணியாற்றிய ஏனைய பெண்களிடம் சகல வாக்குமூலமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.