Our Feeds


Friday, August 20, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரனை: தங்கள் உயிர்களையும், பதவிகளையும் பாதுகாக்குமாறு மகாநாயக்க தேரர்களிடம் மன்றாடும் உயர்மட்ட பொலிஸ் குழு! - VIDEO

 


(எம்.எப்.எம்.பஸீர்)



தமது பதவிகளையும் உயிர்களையும் பாதுகாத்து தருமாறு அஸ்கிரிய, மல்வத்து மகநாயக்க தேரர்களிடம் உயர் மட்ட பொலிஸ் குழு நேற்று விசேட வேண்டுகோளை விடுத்துள்ளது.


போதிய உளவுத் தகவல்கள் பகிரப்பட்டும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்க போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த பொலிஸ் குழு, தலதா மாளிகைக்கு சென்று விசேட மன்றாட்டங்களையும் முன்வைத்துள்ளது.

பொலிஸ்  திணைக்களத்தின் நிர்வாகப்  பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க,  மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நுவரெலியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அத்துகோரள,  மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார, முல்லைதீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் குமாரசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு அஸ்கிரிய, மல்வத்து மகநாயக்க தேரர்களை சந்தித்தும், தலதா மாளிகையை தரிசித்தும் மன்றாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில்,  தாங்கள் மீது தூக்குக் கயிறு விழுவதையோ, தாம் சிறைப்படுத்தப்படுவதையோ, தமது பதவிகள் பறிக்கப்படுவதிலிருந்தோ தம்மை காப்பாற்றுமாறு இதன்போது அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்களை மண்டியிட்டு வேண்டியதாகவும் தலதா மாளிகையிலும் அதற்கான மன்றாட்டங்களில் ஈடுபட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சுட்டிக்காட்டினார்.

‘உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல்கள் இடம்பெறும்போது மேல் மாகாணத்தில், கிழக்கில், அரச உளவுச் சேவையில் கடமையாற்றிய பல பொலிஸ்  உத்தியோகத்தர்கள் இங்குள்ளனர்.  தாக்குதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் எந்த தாமதமும் இன்றி அனைவருக்கும் சொல்ல வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் ஊடாக அது தெளிவாகின்றன.

இந்த நிலையில்  அந்த உளவுத் தகவல்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் குறித்து அப்போதைய அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த ஆலோசனைகளையும் பொலிஸாருக்கு வழங்கவில்லை.  அந்த காலப்பகுதி யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க காலப்பகுதியாக இருந்தமையால்,  ஐ.எஸ். ஐ.எஸ். போன்ற அமைப்புக்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் இருக்கவில்லை.

30 வருட யுத்ததை முடிவுக்கு கொண்டுவரும் பணிகளில் பங்காற்றிய பெரும்பாலான பொலிஸாருக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் மிகவும் அசாதாரணமானவை. பயஙகரவாதிகளுடன் நேரடி மறைமுக தொடர்புகளை பேணிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, குண்டுத் தாக்குதல் நடந்த பிரதேசத்தில் கடமையில் இருந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பது என்பது முழுமையாக  பொலிஸ் கட்டமைப்பை சிதைக்கும்.’ என சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மகநாயக்க தேரர்களிடம் சுட்டிக்காடட்டினார்.

இந்நிலையில் மகநாயக்க தேரர்களுடனான சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மொனராகலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் அப்போது கடமையாற்றிமைக்காக தூக்கு மேடைக்கோ அல்லது பதவிகளில் இருந்து அப்புறப்படுத்தவோ எடுக்கப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்த தலையீடு செய்யுமாறு மகநாயக்க தேரர்களிடம் மன்றாடியதாக தெரிவித்தார்.

‘ நான் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றபோது கடமையில் இருந்தது குற்றமா? ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடாக முழுமையான பொறுப்பை எம்மீது சுமத்தி, எம்மை சிறையில் தள்ள முயற்சிக்கின்ரனர்.

39 வருட சேவை காலத்தைக் கொண்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அத்துகோரள இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெறுகிறார். அவருக்கு ஓய்வூதியம் கூட இல்லாமல்போகும் நிலை உள்ளது.  இதே நிலைமைதான் எமக்கும். எமக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டால், எமது பதவிகள் இல்லாமல்போகும். எனவே வழக்கு தொடுப்பதற்கு முன்னதாகவே நாம் மகநாயக்க தேரர்களை  சந்தித்து இதில் தலையீடு செய்யுமாறு மன்றாடியுள்ளோம்.’ என  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சிசில குமார ஊடகங்கலிடம் கூறினார்.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து, 2019 ஜூன் 20 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு எதிராக பொருத்தமான குற்றவியல் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொலிஸ் மா அதிபருமான சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அப்போதைய சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முனசிங்க,   அதிரடிப்படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப், அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (டி.ஐ.ஜி.)களான  லலித் பத்திநாயக்க,  தேசபந்து தென்னகோன்,  பிரியலால் தஸநாயக்க, அப்போதைய நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி.), கொழும்பு வடக்கு பொலிஸ் அத்தியட்சர் (எஸ்.பி.), நீர்கொழும்பு – பிரிவு 3, நீர்கொழும்பு – பீர்வு  4 உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் (ஏ.எஸ்.பி.), கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜம்பட்டா வீதி பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு எதிராக இந்த விசாரணைகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் எஸ்.ஐ.யூ.எனப்படும்  விசேட விசாரணைப் பிரிவினர் விசரணைகலை முன்னெடுத்த நிலையில் 10 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேவையான குற்றப் பத்திரிகையை தயாரிக்க விசாரணை அறிக்கையை அவர்கள்  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பினர்.

இவ்வாறான நிலையிலேயே அது குறித்து கடந்த ஜூன் 18 ஆம் திகதி அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வினவப்பட்டபோது,

‘20 ஆவது  அரசியல் திருத்த சட்டம் அமுலானதும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலிருந்த அது தொடர்பிலான கோவை, அரச அதிகாரிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரச சேவை ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டது. அவர்கள் அந்த கோவையை ஆராய்ந்து) குற்றப் பத்திரிகையை தயார் செய்து பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். என  தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே உயர் மட்ட பொலிஸ் குழு, மகநாயக்க தேரர்களை சந்தித்து தமக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தடுக்க தலையீடு செய்யுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »