Our Feeds


Thursday, August 19, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: கொரோனாவிலிருந்து மக்களை அரசு காப்பாற்றும் என்பதில் மக்கள் நம்பிக்கையிழந்ததினால் தாமே சுயமுடக்கம் செய்து கொள்கிறார்கள் - இம்ரான் MP கடும் விமர்சனம்

 



கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளார் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 

கொரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றது. நாளாந்தம் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கையும் மரணமடைவோர் எண்ணிக்கையும் மிக அதிகரித்து வருகின்றது. வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் வைத்திய வசதிக்காக அல்லல் படுகின்றனர். 


இதனைக் கவனத்தில் கொண்டு வைத்தியர்களும் ஏனைய சுகாதாரப் பகுதியினரும்  சில நாட்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றையும் கொரோனா மரணங்களையும் குறைக்க முடியும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.


எனினும் இவைகளை அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவும் இல்லை. அதற்கான திட்டங்களும் அரசிடம் இல்லை. இதுவே கொரோனா தொற்று அதிகரிப்புக்கும் கொரோனா மரண அதிகரிப்புக்கும் காரணமாகும்.


எனவே இந்த அரசு மக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை உணர்ந்த மக்கள் அரசில் நம்பிக்கை இழந்து விட்டனர். இதனால் ஆங்காங்கே பிரதேச ரீதியாக மக்கள் ஒன்றிணைந்து தத்தமது பகுதிகளில் சுய முடக்கத்தை பிரகடனப்படுத்தி வருகின்றனர். 


இதேபோல பல்வேறு தொழிற்சங்கங்களும் நாடு தழுவிய முடக்கத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றன. அரசு செய்ய வேண்டிய விடயத்தை இன்று மக்கள் செய்யுமளவுக்கு இந்த அரசாங்கம் மிகவும் பலவீனப்பட்டு விட்டது. 


நாட்டை நிர்வகிக்கும் இந்த அரசியல் தலைமைகளின் குடும்பத்தில் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்பட வில்லை. மரணமடையவில்லை. இதனால் அவர்களுக்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த குடும்பங்களின் துயரங்களை உணர்ந்து கொள்ள முடியவில்லை. இதுவே இன்றைய பிரதான பிரச்சினைக்கு காரணமாகும்.


அரசாங்கத்தின் இந்த அசமந்த நிலை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று மக்களைக் கைவிட்ட அரசாங்கமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. 


எனவே பொதுமக்கள் இந்த அரசாங்கத்தை நம்பியிராது தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »