Our Feeds


Tuesday, August 17, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: இலங்கையில் 7 நாட்களில் கொரோனா தொற்றாளர் 34 சதவீதத்தாலும் மரணிப்போர் எண்ணிக்கை 60 சதவீதத்தாலும் அதிகரிப்பு!

 



(எம்.மனோசித்ரா)


நாட்டில் 7 நாட்களில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 சத வீதத்தாலும் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போர் எண்ணிக்கை 60 சத வீதத்தாலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்றாளர்கள் , மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதன் மூலம் வைரஸ் பரவல் சமூகமயமாகியுள்ளமை தெளிவாகிறது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு மருத்துவ சமூகம் என்ற ரீதியில் எமக்குள்ளது. கடந்த ஒரு வாரத்துக்குள் தொற்றாளர்கள் எண்ணிக்கை 34 சத வீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 60 சத வீதத்தினாலும் அதிகரித்துள்ளது. இதற்கமைய அடுத்துவரும் வாரங்கள் எவ்வாறு அமையும் என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த நிலைமையை அவதானிக்கும்போது இலங்கையில் வைரஸ் பரவல் சமூகமயப்பட்டுள்ளமை தெளிவாகிறது.

இலங்கையில் ஆரம்பத்தில் 0.5 சத வீதமாகக் காணப்பட்ட கொவிட் -19 மரணங்கள் தற்போது 4 – 5 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது. தீவிர நிலைமையை அடையும் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் வைத்தியசாலைகளும் நிரம்பியுள்ளன.

எனவே புதிதாக இனங்காணப்படும் தொற்றாளர்கள் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகள் காணப்படுகின்றன. இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதே சிறந்ததாகும்.
எனவே அநாவசியமாக வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்வதோடு , உற்சவங்கள் , திருமண வைபங்கள் , மரண சடங்குகள் , பொது போக்குவரத்து , சிற்றுண்டிசாலைககள் , ஹோட்டல்கள் , சிகையலரங்கார நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு செல்வதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் 50 வயதுக்கு குறைந்த , தொற்றா நோய்களால் பாதிக்கப்படாத மற்றும் முழுமையாக தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் பாதுகாப்பாக வெளியில் செல்லவது பொருத்தமானது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »