அரசாங்கத்தை கஸ்டத்திற்குள் தள்ளிவிடுவதற்கான சூழ்ச்சி அரசாங்கத்திற்குள் இருக்கின்ற சில அமைச்சர்களால் மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளதென்று பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் எம்.பி தெரிவிக்கின்றார்.
கொழும்பு – பத்தரமுல்லை, நெலும்மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.
தொடர்ந்தும் பேசிய அவர், அமைச்சரவைக்குள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது நாட்டை முடக்கத் தேவையில்லை என்று ஜனாதிபதி சொன்னபோது அமைதியாக இருந்த இந்த அமைச்சர்கள் பின்னர் வெளியே வந்து நாட்டை முடக்கும்படி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பினார்கள். அந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைப்பதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்குக் கிடைத்துவிட்டன. இதில் ஏதோ சூழ்ச்சி நடக்கின்றது. அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிட சிலர் முயற்சிப்பதால் இந்தக் கடிதத்தை எழுதிய அமைச்சர்கள் பற்றி ஜனாதிபதி விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.