Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

BREAKING: அஸாத் சாலி தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரனையிலிருந்து நீதிபதி நவாஸ் விலகினார்

 



(எம்.எப்.எம்.பஸீர்)


கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த மனு மீதான பரிசீலனைகள் இன்று (10) உயர் நீதிமன்றில் நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதன்போதுபோது, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் வழக்கை பரிசீலிக்கும் குழாமிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்தே அம்மனு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாள் ஒன்றில் இன, மத குழுக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தி மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக மனு விசாரணைக்கு வந்தபோது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மீண்டும் ஞாபகப்படுத்தினார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜரத்னம் குற்றப் பகிர்வுப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ள நிலையில் அதன் பிரதி ஒன்றை மிக விரைவில் உயர் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டார். நகர்த்தல் பத்திரம் ஊடாக அதற்க்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாறு அவர் கோரினார்.

அதற்கு நீதிமன்றம் அனுமதித்து மனுவை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது. இதன்போது மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, மைத்திரி குணரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீத் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றி கடந்த எப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விசேட விசாரணைப் பிரிவு இலக்கம் – 1 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குறித்த அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »