மகேஸ்வரி விஜயனந்தன்
அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் எரிபொருள் என்பவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் போதுமான அளவு பணம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, எனவே, அத்தியாவசியப் பொருள் இறக்குமதியில் எவ்விதச் சிக்கலும் ஏற்படாது என்பது நிதியமைச்சின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (3) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “குறித்த அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதிக்காக மாதாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலரும் எரிபொருளுக்காக மாதாந்தம் 200 மில்லியன் அமெரிக்க
டொலரும் ஒதுக்கப்படுகின்றது” என்றார்.
இலங்கையில் அந்நியச் செலாவணி தொடர்பான பிரச்சினை இருந்தாலும் செலுத்த வேண்டிய கடன்தொகையான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர், கடந்த வாரம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கம் படிப்படியாக இருப்புகளை உருவாக்குதல் மற்றம் வெளிநாட்டு சொத்துகளை சம்பாதிக்கும் முறைமை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.
அந்த கவனத்தில், முக்கியமாக ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் நாட்டுக்கு அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
இதேவேளை, நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான எவ்விதத் தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவ்வாறான தட்டுப்பாடு ஏற்படும் என தாம் நம்பவில்லை என்றார்.