நாடு முடக்கப்பட்டுள்ள காலப் பகுதியை நீடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த பின்னணியில், கடந்த 21ம் திகதி முதல் 30ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் கடந்த 20ம் திகதி தீர்மானித்திருந்தது.
எனினும், நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, மேலும் 10 நாட்கள் நாட்டை முடக்குமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் நிஹால் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை போதுமானது அல்லவெனவும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றமை அத்தியாவசியமானது எனவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், 30ம் திகதிக்கு பின்னர் நாடு தொடர்ந்தும் சில தினங்களுக்கு முடக்கப்படுமா? என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கெஹெலிய ரம்புக்வெல, இதுவரை அவ்வாறான தீர்மானத்தை எட்டவில்லை என கூறினார். (TC)