(எம்.எப்.எம்.பஸீர்)
மிரிஹானை, நுகேகொடை, கல்கிஸை, தெஹிவளை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளை அண்மித்து வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறலாம் என மக்களை அச்சமூட்டும் வகையில் குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையிலேயே முப்படைகளின் பதில் அலுவலக பிரதானியும் இராணுவத் தளபதியுடான ஜெனரல் ஷவேந்ர சில்வா, பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்கு வரத்து விவகாரங்களுக்கான் பிரதானி, பொலிஸ் பேச்ச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோர் குறித்த தகவல் பொய்யான செய்தி என உறுதி செய்தனர்.
கடந்த 2019 ஏபரல் 21 குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தகவல் பகிரப்பட்டிருந்ததாகவும், தற்போது அதே தகவல் மீள பகிரப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்த நிலையில், மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்திய பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, குறித்த குண்டு வெடிப்பு எச்சரிக்கை தொடர்பிலான தகவல் முற்றிலும் பொய்யானது என குறிப்பிட்டார்.
அது தொடர்பில் கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அந்த தகவலானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஏபரல் 25 ஆம் திகதி நபர் ஒருவரால் அனுப்பப்பட்ட தகவல் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த தகவலே மீள சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகிள்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இந்நிலையில் மக்களை வீணாக அச்சம் கொள்ளத் தேவை இல்லை என குறிப்பிடும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான போலியான விடயங்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.