எம். றொசாந்த்
பருத்தித்துறையில், இரண்டு இந்து கோவில்கள், நேற்று (07), தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், வழிபாடுகள் அனைத்தும் 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டன.
பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோவில்;, பருத்தித்துறை சிவன் கோவில் என்பனவே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.
பருத்தித்துறை முனியப்பர் கோவில், இரதோற்சவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, அதிகளவான பக்தர்கள் பங்கேற்றமை மற்றும் அவர்கள் முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றமை தொடர்பில் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு ஒளிப்படத்துடன் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அது தொடர்பில் பருத்தித்துறை சுகாதர மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனடிப்படையில், சுகாதார நடைமுறைகளை பேண தவறியதால் கோவிலை வரும் 21ஆம் திகதி வரை வழிபாடுகளை நிறுத்தி மூடுவதற்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது.
அதேபோன்று, பருத்தித்துறை சிவன் கோவிலிலும் சுகாதார நடைமுறைகளை மீறி வெளி வீதியில் திருவிழாவை நடத்தியதால், அந்த கோவில் வழிபாடுகளும் வரும் 21ஆம் திகதி வரை இடைநிறுத்த அறிவித்தல் வழங்கப்பட்டது.
அத்துடன், கோவில் நிர்வாகிகளும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.