Our Feeds


Thursday, August 26, 2021

www.shortnews.lk

தொற்றுக்குள்ளான குழந்தைக்கு திடீரென உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடையும் நிலை.

 



கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தை தனது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடும் போது எந்த ஒரு நோய் அறிகுறிகளும் இல்லாமல், திடீரென்று அவரது உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடையும் நிலையை தற்போது காணக்கூடியதாக உள்ளது என்று சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


அதாவது, மூச்சு விடுவதில் சிரமம் அல்லது நடக்க சிரமப்படுதல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரே நேரத்தில் உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடைவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நளின் கிதுல்வத்த, கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தையின் ஒக்சிஜன் அளவு இயல்பாக இருக்கும் சந்தர்ப்பத்தில், ​​குழந்தை ஓடும் போதும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடைகின்ற சந்தர்ப்பங்கள் பல காணக்கூடியதாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, முடிந்தால், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குழந்தையின் ஒக்சிஜன் அளவை பரிசோதிப்பது சிறந்தது.

இதற்கமைய குழந்தையின் சிறிய செயல்பாடொன்றின் பின்னர்ஒக்சிஜன் குழந்தையின் உடலில் ஒக்சிஜன் அளவு 94 வீதத்திற்கும் குறைவாக இருந்தால், அல்லது ஓய்வில் இருக்கும் போது குழந்தையின் ஒக்சிஜன் அளவு 96 வீதத்திற்கும் குறைவாக இருந்தால் உடனடியாக குழந்தையை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயுற்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணம், அவர்கள் வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் திட்டத்தின்கீழ் கண்காணிக்கப்படுகின்றமை ஆகும் என்றும் விசேட வைத்தியர் நளின் கிதுல்வத்த சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றுள்ள குழந்தைகளை வீடுகளில் வைத்து கண்காணிக்கும் திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது வழங்கக் கூடியதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் முறைக்கு அமைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று வைத்தியம் நளின் கிதுல்வத்த கூறினார்.

இது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் விவாதித்து வருவதாகவும், அந்த வயதினருக்குள் பல்வேறு சிக்கல்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »