நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள கொவிட் செயலணியை கலைத்துவிட்டு, அமைச்சரவை ஊடாக விசேட குழுவொன்றை நியமித்து கொரோனா விடயங்களை அரசாங்கம் கையாள வேண்டுமெனவும், இல்லையெனில் பல உயிர்கள் செத்து மடிவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர் வார்டுகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. எனவே, இராணுவம் மற்றும் இராணுவ பொறியியல் பிரிவினரின் உதவியுடன் தற்போது உள்ள மருத்துவமனைகளுக்கு அருகிலேயே புதிய மருத்துவமனைகளையோ அல்லது மருத்துவமனை கட்டட வசதிகளையோ அதிகரிக்குமாறும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற சபையில் குறிப்பிட்டார்.
சுனாமி காலத்திலும் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பை ஓரிரு வாரங்களில் அரசாங்கம் சிறப்பாக கையாண்டு மக்களுக்கு நிவாரணமும் வழங்கியிருந்தது. அதே போன்று கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் புதிதாக நிதி ஒதுக்கீடு செய்தேனும் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
நாங்கள் கொவிட் பிரச்சினையை அரசியலாக்கவில்லை, ஆனால் இப்போது இதை அரசியல் ரீதியாகவே தீர்க்கவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.