(எம்.எப்.எம்.பஸீர்)
நவரசம் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு உடனடியாக அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
சட்டத்தரணிகள் – சேவை பெறுநர்களிடையேயான சிறப்புரிமை மற்றும் இரகசிய தன்மையை தொடர்பிலான உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்தச் சந்திப்பு அனுமதியை உடன் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது.
அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பரிசீலனைக்கு வந்தபோது, நீதிமன்றம் இதனை அறிவித்தது.
குறித்த மனு மீதான பரிசீலனைகள் உயர் நீதிமன்ற நீதியர்சர் முர்து பெர்ணான்டோ தலைமையிலான , யசந்த கோதாகொட மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றின் 502 ஆம் இலக்க விசாரணை அறையில் பரிசீலிக்கப்பட்டிருந்தது.