கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் (கொழும்பு 1 -15) வசிக்கும் ஒரு கொவிட் தடுப்பூசியையேனும், பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய, நடைமுறைப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் காவல்துறை மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஒன்றிணைந்து, கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் நபர்களை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிற்கு அழைத்துசென்று அவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் வசிக்கும், கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தாமாக சென்று சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிலுள்ள நடமாடும் தடுப்பூசி மையத்தில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.