(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஏனைய விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும் முன்னரேயே, விசாரணைகளுக்கு உட்பட வேண்டிய மிக இரகசிய விடயங்களை ஊடகங்களுக்கு வழங்குவதன் ஊடாக, விசாரணைகள் பாதிப்படைவதாகவும் நியாயத்தை நிலைநாட்டும் பணிகளுக்கு அவை இடையூறாக அமையலாம் எனவும் அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரனி அனில் சில்வா ஆகியோர் முன்வைத்த விடயங்களை மையப்படுத்தி இந்த உத்தரவு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவினால் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, ஹிஷாலினி விவகாரத்தில், விசாரணை சந்தர்ப்பத்தில், உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் கோரிக்கையை ஏற்று, விசாரணையில் மிக இரகசியமாக பேணப்பட வேண்டிய விடயங்களை, நீதிமன்றுக்கு அறிவிக்கும் முன்பதாகவே ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுக்கவும் பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.