Our Feeds


Sunday, August 15, 2021

www.shortnews.lk

ஐ.தே.க வின் செயற்குழுவில் ஆவேசமடைந்த ரவி கருணாநாயக்க | அமைதியாக இருந்த ரணில் : நடந்தது என்ன?

 



முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கலந்துக்கொண்டு, ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளதாக சிறி கொத்த தகவல்கள்  உறுதிப்படுத்தின.


இவ்வாறு கலந்துக்கொண்ட ரவி கருணாநாயக்க, கட்சிக்குள் காணப்படுகின்ற தவறுகள் குறித்து மிக ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் தனக்கும், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அர்ஜுன் அலோசியசிற்கும் எதிராக பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்து தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அப்போது விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் கபீர் ஹஷிம் தொடர்பில் எவரும் கருத்து வெளியிடவில்லை என கூறிய ரவி கருணாநாயக்க, இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே கபீர் ஹஷிம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் தனித்தனியாக பிரிந்து செயற்பட்டமையே, இந்த நிலைமைக்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கும், நாட்டிற்கும் செய்த சேவைகள் தொடர்பில் பிரசாரம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் செய்த வேலைகள் தொடர்பில் தற்போதே மக்கள் பேசுகின்றனர் எனவும் அவர் நினைவூப்படுத்தியுள்ளார்.

இன்று நான் தனித்து விட்டேன். நீங்கள் தனித்து விட்டீர்கள். இன்றும் பிரசாரம் இல்லை” என ரவி கருணாநாயக்க மிக ஆவேசமாக கருத்துரைத்துள்ளார்.

அதேவேளை, பஷில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி தமது எதிர்ப்பை வெளியிடவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் என்ற விதத்தில் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், இன்றாவது ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவின் எதிர்ப்பிற்கு, அங்கு அமர்ந்திருந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்தையும் தெரிவிக்காது அமைதியாக இருந்ததாக சிறி கொத்தவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்வு எதிர்வரும் 6ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே, இந்த அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »