(எம்.எப்.எம்.பஸீர்)
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பொலிஸார் நேற்று வழக்கின் 5 ஆவது சந்தேக நபராக பெயரிட்டனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆயிஷா, ரிஷாத்தின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் ஆகிய நால்வருடன் சேர்த்து 5 ஆவது சந்தேக நபராக ரிஷாத் பதியுதீனை பெயரிடுவதாக, நேற்றைய தினம் விசாரணையாளர்கள் சார்பில் மன்றில் ஆஜரான அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றுக்கு அறிவித்தார்.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் நேற்று மீளவும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது இந்த விவகாரத்தில் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம், 2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தண்டனை சட்டக் கோவை திருத்தச் சட்டத்தின் 308,358,360 ஆவது அத்தியாயங்களின் கீழ் 18 வயதின் கீழான ஒருவரை அடிமைத் தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை, துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா, ரிஷாத்தின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் ஆகிய நால்வரும் நேற்று நீமிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை. அவர்கள் விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலசூரிய, கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் இனோகா, கொழும்பு தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார, விசாரணைகளை மேற்பார்வை செய்யும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வா, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகாகுமாரி ஆகியோர் நீதிமன்றில் ஆஜரானதுடன் அவர்களுக்காக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அரச சட்டவாதி ஹங்ச அபேரத்னவுடன் ஆஜரானார்.
முதல் சந்தேக நபரான தரகர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் குமாரவும், ரிஷாத்தின் மாமனார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், 3 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மனைவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட சட்டத்தரனி பிரசாத் சில்வாவும் ரிஷாத்தின் மைத்துனருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி கால்லிங்க இந்ரதிஸ்ஸ சுகயீனமடைந்துள்ள நிலையில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹேமந்த கமகேவும் ஆஜராகினர். நேற்றைய தினம் சந்தேக நபராக பெயரிடப்பட்ட ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீத் ஆஜரானார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக, சிரேஷ்ட சட்டத்தரணி கணேஷ் ராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் பிரசன்னமானது.
இந்நிலையில், மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடயங்களை முன்வைத்தார்.
அதன்படி சம்பவ இடமாக கருதப்படும் குற்றம் இடம்பெற்றது என நம்பப்படும் இடம், சம்பவத்தின் பின்னஎர் மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழும் நிலையில், அது தொடர்பில் விசேட விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
அத்துடன் ஹிஷாலினியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற 1990 அம்பியூலன்ஸ் வண்டியின் , தாதியாக செயற்பட்ட அஞ்சலி எனும் யுவதியின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு வந்தவுடன், பாதிக்கப்பட்ட ஹிஷாலினியை எவ்வாறு முதலுதவி அளித்து தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதை தாம் அழைப்பை ஏற்படுத்தியோருக்கு கூறியதாகவும், அதன்படி அந்தச் செயற்பாடுகள் நடந்திருக்கவில்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் குறிப்பிட்டார்.
தீ பரவலுக்கு உள்ளான ஹிஷாலினியின் உடலை குளிர்மைப்படுத்துமாறு தாம் ஆலோசனை வழங்கியிருந்த போதும், அம்பியூலன்ஸ் வண்டி அங்கு செல்லும் போதும் ஹிஷாலினி போர்வை ஒன்றினால் போர்த்தியவண்ணம் உட்கார்ந்திருந்ததாக அவரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்லதாக திலீப பீரிஸ் மேலும் கூறினார்.
இந்நிலையில் ஹிஷாலினி தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது பெசில் எனும் வைத்தியரே அவரை முதலாவதாக பரிசோதித்துள்ளதாகவும், அது முதல் பல பெண் வைத்தியர்களும் தாதியரும் ஹிஷாலினியை பரிசோதித்தபோதும் அவர் யாரிடமும் எதனையும் கூறவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், 3 மணி நேரத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கும்போது வைத்தியர் ரந்திக என்பவரிடம் மட்டும் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாகவும், மண்ணென்னெய் மற்றும் லைட்டரை பயன்படுத்தி அதனை செய்ததாகவும் ஹிஷாலினி தெரிவித்ததாக கூறபடுவது சந்தேகங்களை தோற்றுவிப்பதாக தெரிவித்தார்.
தற்போது உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியம் சென்றுள்ள அவரிடம் அது குறித்து விசாரிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதனைவிட, அம்பி யூலன்ஸ் வண்டியின் தாதி மற்றும் வெளிநோயாளர் பிரிவில் முதலில் ஹிஷாலினியை பரிசோதித்த வைத்தியர்கள் மற்றும் தாதியரின் வாக்குமூலத்தின் பிரகாரம் மற்றொரு புதிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அந்த வைத்தியர்கள், தாதியரிடம் ஹிஷாலினி கேஸ் தொடர்பிலான தீ காயங்களுக்கு உள்ளானதாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது 2 ஆவது சந்தேக நபர் குறிப்பிட்டமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனைவிட, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று, ஹிஷாலினி விவகாரத்தை மறைக்க பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் -19 தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளபோதும், பொலிஸ்மா அதிபரோ பொலிஸ் திணைக்களமோ அந்த அதிகாரி தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் வெட்கித் தலை குனிய வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இதன்போது அது குறித்து நீதிவான் அங்கிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவிடம் அது குறித்து வினவியபோது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கை எதுவும் இதுவரை இல்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் முதலில் பிரேத பரிசோதனையை நடத்திய விசேட சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக், தொடர்பில் பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி பாலசூரிய இட்டிருந்த குறிப்பு ஒன்றை மிகைப்படுத்தி, முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் எழுந்ததாக சுட்டிக்காட்டிய திலீப பீரிஸ் அந்த குறிப்பையும் நீதிமன்றில் வெளிப்படுத்தினார்.
அதன்படி, பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்துக்கு சென்று அந்த அறிக்கையின் தெளிவின்மைகளை விசாரிக்க விளைந்துள்ளதாகவும், அதன்போது, ஹிஷாலினி நாட்பட்ட பாலியல் ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில், அவர் 12 வயதிலிருந்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும், அவரது தொடர்புகள் குறித்து விசாரிக்குமாறும் சட்டவைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் குறிப்பிட்டதாகவும் அந்த குறிப்பு இடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கூறினார்.
அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய பீடத்தின் பேராசிரியர் வைத்தியர் ஜீன் பெரேரா தலைமையிலான மூவர் கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகளின் 2 ஆவது பிரேத பரிசோதனை அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலும் ஹிஷாலினி நாட்பட்ட பாலியல் ஊடுருவலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் அதில் எந்த காலப்பகுதியில் அவர் இவ்வாறு பாலியல் ஊடுருவலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை கூறுவது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிட்டர் ஜெனரல் திலீப பீரிஸினால் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், தற்போது விசாரணை மிக தீர்க்கமான கட்டத்தில் உள்ள நிலையில், அடுத்த தவணையின்போது ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக இருக்கும் என சுட்டிக்காட்டிய திலீப பீரிஸ், அதுவரை சந்தேக நபர்களின் பிணை குறித்து தீர்மானிக்க வேண்டாம் எனவும், அடுத்த தவணையின் பின்னர் அது குறித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்ட்டி பிணை வழங்க எதிர்ப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து முதலாவது சந்தேக நபர் சார்பில் முதலில் விடயங்களை
முன்வைத்த சட்டத்தரணி மேக்ஷ் குமார, தனது சேவை பெறுநருக்கு பிணை வழங்க பிணை சட்டத்தின் 14 ஆவது அத்தியாயத்தின் கீழ் எந்த தடைகளும் இல்லை என வாதிட்டார்.
இதனையடுத்து 2 ஆவது சந்தேக நபரான ரிஷாத்தின் மாமனார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன வாதங்களை முன்வைத்தார்.
அவர் நீதிவானிடம் 2 ஆவது பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று அதனை பரீட்சித்த பின்னர் விடயங்களை முன்வைத்தார்.
அதன்படி முதலாம் பிரேத பரிசோதனைக்கும் 2 ஆம் பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கும் எந்த வித்தியாசங்களும் இல்லை என நீதிமன்றில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, கொலையா, தற்கொலையா என்பதை பிரேத பரிசோதனை அறிக்கையில் கூற முடியாது என இந்த அறிக்கையும் தெளிவாக கூறுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் சுயமாக தீ வைத்துக் கொள்ளவில்லை என்ற விடயத்தை உறுதிப்படுத்தவும் எந்தச் சான்றுகளும் இல்லை என தெளிவாக 2 ஆவது பிரேத பரிசோதனை அரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மீண்டும் அந்த அறிக்கையைப் பெற்று நீதிவானுக்கு வாசித்துக் காட்டி ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உறுதி செய்தார்.
இந்நிலையில், ஏற்கனவே கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டரீதியிலான வாதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஞாபகப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, எந்தவொரு நிபந்தனையிலும் கீழும் பிணையளிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து ரிஷாத்தின் மனைவி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரனி பிரசாத் சில்வா வாதங்களை முன்வைத்தார்.
நாட்டிலும் சிறையிலும் கொவிட் -19 நிலைமையை கருத்தில் கொண்டும், தனது சேவை பெறுநருக்கு உள்ள நோய் நிலைமைகள், அவர் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்களை மையப்படுத்தி அவர் பிணை கோரினார்.
2020 ஆகஸ்ட் 30 ஆம் திகதி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ரிஷாத்தின் மனைவிக்கு உணவுகளில் கூட கட்டுப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி பிரசாத் சில்வா, தாய் மற்றும் தந்தை இருவரும் விளக்கமறியலில் உள்ள சூழலில் அவர்களது 3 பிள்ளைகளும் எதிர்கொண்டுள்ள மன உலைச்சலையும் கருத்தில் கொண்டு பிணையளிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து 4 ஆவது சந்தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹேமந்த கமகே, பிணை கோரினார். நான்காவது சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி உடைந்த நிலையில், தற்போது அது பகுப்பாய்வுக்கு சிஐடியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீமன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அந்த விடயமோ ஏனைய விசாரணைகளிலோ மதவாச்சியை சேர்ந்த ஒருவருக்கு தலையீடு செய்யும் அளவுக்கு எந்த தேவையும் இல்லை என சட்டத்தரணி ஹேமந்த கமகே சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, சந்தேக நபர்கள் சாட்சிகள்மீது அழுத்தம் பிரயோகிக்கலாம் எனும் விடயத்தையும் நியாயம் நிலைநாடப்படும் வழிமுறைகளில் தலையீடு செய்யலாம் எனும் விடயத்தையும் மையப்படுத்தி பிணைக் கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதிவ ரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அன்றைய தினம் 5 ஆவது சந்தேக நபராக ரிஷாத் பதியுதீனை நீதிமன்றில் ஆஜர் செய்யவும் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார். (metro)