Our Feeds


Friday, August 13, 2021

www.shortnews.lk

ஆப்கானிஸ்தானின் 2வது மிகப்பெரும் நகரான கந்தகாரையும் தாலிபான்கள் கைப்பற்றினர் - ஆளுனர் தப்பியோட்டம் - அதிகாரப் பகிர்வுக்கு அரசு அழைப்பு

 



ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரையும் தலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது.  கந்தகார்   மாகாணத்தின் தலைநகராக கந்தகார் (Kandahar ) உள்ளது. இது ஆப்கானிஸ்தானின் 2 ஆவது மிகப்பெரிய நகராகும்.

கடந்த ஒரு வார காலத்தில் தலிபான்கள் கைப்பற்றிய 12 ஆவது மாகாண தலைநகரம் கந்தகார் ஆகும்.

இன்று  வெள்ளிக்கிழமை காலை கந்தகார் மாகாண ஆளுநர் வளகத்தில் தலிபான்கள் தமது கொடியை ஏற்றினர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆப்கானிஸ்தானின் 3 ஆவது மிகப் பெரிய நகரான ஹேரத் (Herat) நகரையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று கஸ்னி மாகாணத்தின் தலைநகர் கஸ்னி (Gazni) முதலானவற்றை தலிபான் கைப்பற்றியிருந்தனர்.

ஆளுநர் கைது

கஸ்னி மாகாணத்திலிருந்து வெளியேற்றிய அம்மாகாணத்தின் ஆளுநர் தாவூத் லக்மானி ஆப்கானிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சின் பேச்சாளர்  மிர்வாய்ஸ் ஸ்டானிக்ஸாய் தெரிவித்துள்ளார்.

தலிபான்களுடன் போராடுவதற்குப் பதிலாக அவர்களுடன் உடன்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு ஆளுநர் தாவூத் லக்மானி வெளியேறியதால் அவர் தனது சகாக்களுடன் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை தலிபான்கள் தற்போதைய வேகத்தில் முன்னேறிச் சென்றால், அவர்கள் தலைநகர் காபூலை 30 நாட்களில் தனிமைப்படுத்த முடியும், 90 நாட்களில் அந்நகரை கைப்பற்றக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்,

குந்தூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா, கஸ்னி உள்ளிட்ட 12 மாகாணங்களின் தலைநகர்கள் தலிபான்கள் வசம் சென்றுவிட்டன.

இந்நிலையில் வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான்கள்  தனிமைப்படுத்தி விடுவார்கள். அதிகபட்சம் 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காபூல் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் என்பது தலிபான் தீவிரவாதிகள் முன்னேறிச் செல்லும் வேகத்தைப் பொருத்து அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

எனினும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்பட்சத்தில் தலிபான்களின் வேகத்தை மாற்ற முடியும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இவ்வருடம் இதுவரை 5 லட்சம் பேர் நாடு முழுவதும் இடம்பெயர்ந்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வேலையிழப்பு, உணவுப் பஞ்சம் என பொருளாதார நெருக்கடி அங்கு முற்றி வருகிறது.

ஆதிகார பகிர்வுக்கு தலிபான்களுக்கு அழைப்பு

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் அதிகார பகிர்வுக்கு தலிபான்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கத்தார் ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அல் ஜஸீரா தெரிவித்துள்ளது.

எனினும், இது குறித்து ஆப்பானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை இதை உறுதிப்படுத்தவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »