வா.கிருஸ்ணா
“சீனாவின் வழிதடத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் இலங்கை சீனாவின் ஒரு மாகாணமாகச் செயற்படுகின்றது” எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் “இது இந்தியாவுக்கோ மேற்குலக நாடுகளுக்கோ விரும்பத்தகாத செயலாகவே உள்ளது” என்றார்.
“வடக்கு மற்றும் கிழக்கில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது. இது இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும். ஆகையால் இந்தியாவின் பகையை சம்பாதிக்கக்கூடிய நிலைமையை இவ்வரசாங்கம் உருவாக்கி வருகின்றது” என்றார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர் “மேற்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு பலவிதமான அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனினும் சீனாவை முற்றுமுழுதாக நம்பி சீனாவின் வழித்தடத்தில் சீனாவின் ஒரு மாகாணம் போன்று இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது” என்றார்.
நாட்டுக்குள் சீனர்களின் வருகையும் நாட்டின் பல பாகங்களில் அவர்களால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் இந்த நாட்டை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடாகவே அமையுமெனத் தெரிவித்த அவர் சீருடை விவகாரத்தில் அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்றார்.
யாழ். மாநகர சபையின் மேயர் மணிவண்ணன் மாநகர சபையின் எல்லைக்குள் வாகன தரப்பிடக் காவல்களுக்காக விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த சீருடையை அறிமுகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஆனால் சீன இராணுவத்தின் சீருடையை அணித்த சீனர்களுக்கோ அவர்களை அழைத்துவந்த நிறுவனப் பிரதிநிதிகளுக்கு எதிராகவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தவிதக் கேள்வியும் இல்லை” என்றார்.
ஒட்டுமொத்த நாட்டையே சீனர்களுக்குக் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது என எச்சரித்த கோவிந்தன் கருணாகரம் எம்.பி. இவ்வாறான செயற்றாடுகள் இந்நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டுசெல்லும் என்றார்.