Our Feeds


Wednesday, July 7, 2021

www.shortnews.lk

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தில் முஸ்லிம் MP க்களின் விருப்பத்துக்கு மாறான தீர்மானங்கள் வேண்டாம்! ஹரீஸ் MP கோரிக்கை

 



(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)


முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாற்றமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடாது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற வர்த்தக அமைச்சின் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் கடுமையாக செயற்படுத்தி சிறுபான்மை மக்களின் மத மற்றும் அரசியல் உரிமைகளை இல்லாமலாக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக அவதானித்து வருகிறது.

இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை எமக்கு இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் இல்லாமல்போனால் அது எமது பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

மேலும்பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக நீதி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். அது செய்யப்பட வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவில்லாமல் பல அரசியல தலைவர்கள் கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது. மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டு பல மாதங்களாக எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோன்று தமிழ்  அரசியல் கைதிகள் பலர் பல வருடங்களாக சிறைகளில்   அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.அதனால் அரசாங்கம் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக நீதி அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் கலந்துரையாடியபோது எமது கருத்துக்களை கருத்திற் கொள்வதாக தெரிவித்தார்.

அதனால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாற்றமாக மேற்கொள்ளக் கூடாது. அதேபோன்று முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம், காழி நீதிமன்றம் தொடர்பாகவும் திருத்தங்களை மேற்கொள்ளும்போது முஸ்லிம் அறிஞர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »