Our Feeds


Friday, July 2, 2021

www.shortnews.lk

BREAKING: கொரோனா ஜனாஸா அடக்குவதற்கு பணம் வசூலிக்கப்படுகிறதா? - பிரதேச சபை விளக்கம் - பொலிசிலும் முறைப்பாடு.

 



(கல்குடா நிருபர்)


கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் உடல்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்வதை காட்டி பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யும் வகையில் சிலர் மரணமடைந்தவர்களின் உறவினர்களிடம் பணம் வசூலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு எழுத்துமூலம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டதுன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் பிரதேச சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உடல்கள் அடக்கம் செய்யும் வகையில் யாரும் பணம் வசூலித்தால் அவர்களை எங்களிடம் யார் என்று அடையாளப்படுத்துங்கள். அவ்வாறானால் எங்களுக்கு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலகுவாக அமையும். மேலும் ஓட்டமாவடி பிரதேச சபையினால் எந்தவிதமான பணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதனையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதுவரை 862 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இடம் போதாமை காரணமாக ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வாகனேரி சாப்பமடு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றி ஓட்டமாவடி பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சூடுபத்தினசேனை பகுதியில் இன்னும் 300 உடல்களை அடக்கம் செய்ய வாய்ப்புக்கள் உள்ளதாக அறிய முடிகிறது. நாடளாவிய ரீதியில் அடக்கம் செய்வதற்கு இடம் எட்டப்படாத நிலையில் அவசரமாக இடம் தேவைப்படும் பட்சத்தில் அருகில் காணப்படும் இரண்டு ஏக்கர் காணிகளை பெறுவதற்கும் அடையாளப்பட்டுள்ளது.

எனவே நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல்வாதிகள், புத்தஜீவிகள், கல்வியலாளர்கள் மிக விரைவாக உடல்களை அடக்கம் செய்வதற்கான வேறு இடங்களை தயார்ப்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் பிரதேச சபைசெயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அமீர்,எம்.பி.ஜௌபர், எஸ்.ஏ.அன்வர், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர்எச்.ஏ.சி.நியாஸ், ஓட்டமாவடி அரிசி உரிமையாளர் சங்க ஆலோசகர் எம்.எஸ்.ஹலால்தீன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »