Our Feeds


Wednesday, July 7, 2021

www.shortnews.lk

BREAKING: கொரோனா தீவிரமடைவதால் இலங்கைக்கு விஜயம் செய்வதை மீளாய்வு செய்யுங்கள்! - தம் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவிப்பு.

 



(நா.தனுஜா)


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீளாய்வு செய்வது சிறந்ததாகும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

அமெரிக்கப் பிரஜைகள் இலங்கைக்குப் பயணம் செய்வது குறித்த அறிவிப்பொன்று கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பில் ‘இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்’ என்பதைக் குறிக்கும் 3 ஆம் மட்ட எச்சரிக்கையானது, ‘இலங்கைக்கு விஜயம்செய்ய வேண்டாம்’ என்பதைக் குறிக்கும் 4 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருந்தது. எனினும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட 4 ஆம் மட்ட எச்சரிக்கை தற்போது மீண்டும் 3 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதன்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் நேற்று (06) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பயண அறிவுறுத்தலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேவேளை இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் உயர்வடைந்திருப்பதைக் காண்பிக்கும் வகையில் அமெரிக்காவின் தொற்றுநோய்ப்பரவல் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு நிலையமானது, இலங்கை தொடர்பில் 3 ஆம் மட்ட சுகாதார எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்கப் பிரஜைகள் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றிருப்பின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கும் தீவிரமான அறிகுறிகள் தென்படுவதற்குமான வாய்ப்பு மிகவும் குறைவாகும். இருப்பினும் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் மீளாய்வு செய்வதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு அமெரிக்கத் தூதரகத்தின் கொவிட் – 19 குறித்த இணையப் பக்கத்தைப் பார்வையிடுவதும் வரவேற்கத்தக்கதாகும் என்று அப்பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »