Our Feeds


Tuesday, July 13, 2021

www.shortnews.lk

BREAKING: தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசாங்கம் பக்கச் சார்பாகப் பிரயோகிப்பது கண்டிக்கத்து! - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

 



(நா.தனுஜா)


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதும் ஒரு சாராருக்கு மாத்திரம் பாதிப்பேற்படக் கூடியவாறு அச்சட்டத்தைப் பக்கச் சார்பாகப் பிரயோகிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்த செயற்பாடுகளாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது..

அதுமாத்திரமன்றி தனிமைப்படுத்தல் சட்டமானது, அரசியலமைப்பின் பிரகாரம் அ ச்சட்டத்தைப் பிரயோகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவர்களால் மாத்திரம் கையாளப்படும் அதேவேளை, அச்சட்டம் அனைவருக்கும் ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேற்படி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட  அச்சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்ட விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது:

நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டமானது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தை நிறைவேற்றுவதானது, கல்விக்கட்டமைப்பை இராணுவமயப்படுத்தும் செயற்பாடாக அமையுமென்றே நாம் கருதுகிறோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தவிர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில விடயங்களில் இந்தத் தனிமைப்படுத்தல் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவே நாம் கருதுகிறோம். குறிப்பாக ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கோஷத்துடன் ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதில் பக்கச் சார்பான தன்மையைக் கடைப்பிடிக்கின்றமை வெளிப்பட்டுள்ளது. அதிலும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும்

ஆர்ப்பாட்டங்களையும் தொழிற்சங்கப் போராட்டங்களையும் கட்டுப்படுத்தும் விதத்தில் இந்தத் தனிமைப்படுத்தல் சட்டம் பயன்படுத்தப்படுவதென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »