(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின்போது தொற்றினால் மரணமடைந்த நபர்களின் உடல்கள் நல்லடக்கத்துக்காக நாளொன்றுக்கு 15 – 20 வரை வருகின்றன என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பணிகள் இன்றுவரை ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருவதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நல்லடக்கப் பணிகள் இடம்பெறும் இடத்தில் அவசியம் காணப்பட்ட முக்கிய தேவைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
தற்போது சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் மஜ்மா நகர் பகுதியில் இடப்பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் தொடர்ந்தும் உடல்களை நல்லடக்கம் செய்ய கிரான் பிரதேச செயலாளர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய பிரதேச எல்லைக்குட்பட்ட சாப்பமடு எனும் பகுதியை அடையாளப்படுத்தி அதில் நல்லடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் இன்று முதலாம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை 850 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 806 முஸ்லிம்களின் உடல்களும், 17 கிறிஸ்தவர்களின் உடல்களும், 16 இந்துக்களின் உடல்களும், 9 பௌத்தர்களின் உடல்களும் மற்றும் 2 வெளிநாட்டு பிரஜைகளின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.