நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
மேலும், உலராத நெல்லின் விலை ரூ .44 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் அரிசி பற்றாக்குறை இல்லை என்று கமத்தொழில் அமைச்சர் கூறியிருந்தாலும், அரிசி பற்றாக்குறை இருப்பதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சந்தையில் அரிசியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ சிகப்பரிசியின் விலை 110 ரூபாவாகவும், பச்சை அரிசியின் விலை 115 ரூபாவாகவும், நாட்டரிசியில் விலை 125 ரூபாவாகவும், சம்பா அரிசியின் விலை 155 ரூபாவாகும், கீரி சம்பா அரசியின் விலையில் 220 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமையின் கீழ் அரிசி பற்றாக்குறை காரணமாக, 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பண்துல குணவர்தன தெரிவித்தார்.