Our Feeds


Sunday, July 11, 2021

www.shortnews.lk

கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் - மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

 



(இராஜதுரை ஹஷான்)


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையும் கொழும்பு தொடக்கம் ஹம்பாந்தோட்ட வரையிலான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆகவே இக்கடல் பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகயில் ஈடுபடுவதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்பில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தினால் நாளை மாலை வரை அதிகரிக்கக் கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கொந்தளிக்க கூடும். இக்காலப் பகுதியில் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடிக்கடி மழையுடனான காலநிலை நாளை (12) காணப்படும். ஒரு சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் வடமேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்ய கூடும்.

மலையகத்தில் மணித்தியாலத்துக்கு 60 மில்லி மீற்றர் வேகத்தில் காற்றுடனான் மழை பெய்ய கூடும். வடக்கு, வடமத்திய , மற்றும் வடமேல் மாகாணம், மேல்மாகாணம், மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலயத்துக்கு 50 மில்லி மீற்றர் வேகத்தில் மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறும்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க , காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நெலுவ போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன. கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிற்ற, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த , நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ ,இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, எலபாத்த, எஹெலியகொட,கஹவத்த,, நிவித்திகல,கலவான போன்ற பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் ஓரளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »