அரசியல் ரீதியானதும் இன ரீதியான சிறுபான்மை கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விகிதாசார தேர்தல் முறை எக்காரணம் கொண்டும் மாற்றப்படக் கூடாதென்ற தீர்மானத்தில் இருக்கின்றோம். இம்முறை மாற்றப்படுமானால் இந்த விகிதாசார முறையின் கீழ் அரசியல் ரீதியிலான சிறுபான்மை கட்சிகள் இன ரீதியான சிறுபான்மை கட்சிகளுக்குக் கிடைக்கக்கூடிய எல்லா பிரதிநிதித்துவங்களும் இல்லாமற் போகும் என்றார்.
“தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படும் போது பாராளுமன்றம் மாகாண சபை உள்ளூராட்சி மன்றங்களில் இருக்கக் கூடிய எல்லா பிரதிநிதித்துவங்களும் அதேயளவிலேயே உறுதிப்படுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டு மேலே செல்ல வேண்டுமே தவிர அதை இல்லாதொழிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் நாங்கள் உடன்பட மாட்டோம்” என்றார்.