Our Feeds


Thursday, July 29, 2021

www.shortnews.lk

சம்பந்தனின் மரணத்துக்காக நான் காத்திருக்க வில்லை - பிள்ளையான்

 



வா.கிருஸ்ணா


“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.


கிழக்கு மாகாணம் தொடர்பில் பரந்த திட்டங்களுடன் தாம் செயற்படுவதாக தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தின் சுபீட்சம் நோக்கியே தமது பயணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பில், மட்டக்களப்பில் வைத்து, நேற்று (28) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண அரசியல் தலைவிதியை எப்படி நிர்ணயிக்க வேண்டும், கிழக்கு மக்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும், கிழக்கு மக்களுக்கான கல்வி எவ்வாறு அமையவேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், குளம் எங்கே கட்ட வேண்டும், எந்த அபிவிருத்தியைக் கூட்டினால் மக்கள் நன்மை அடைவார்கள்
என்பது குறித்து எங்களிடத்தில் திட்டங்கள் இருக்கின்றன.

“திட்டம் இல்லாமல் அரசியலுக்காக அல்லது சம்பந்தருடைய மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை. எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து, இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையைக் கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்குப் பாடுபடுகிறோம்.

இதேவேளை, “டயகம சிறுமிக்கு இடம்பெற்ற சம்பவம் போல் இந்த நாட்டில் இனியொருபோதும் இடம்பெறாத வகையில், அனைவரும் ஒன்றிணைந்து, செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

“பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதானது கவலைக்குரியதுடன், இது கண்டிக்கத்தக்கது. “அத்தோடு, நாடு தற்போதிருக்கும் சூழ்நிலையில், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் கவலைக்குரியதாகவுள்ளன.

ஆசிரியர் சங்கங்கள், தமது உரிமைகளைக் கோரி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில், மாணவர்களுக்கான கல்வியை வழங்காமல் தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

மேலும், பாடசாலையில் ஐந்து மாணவர்களையேனும் உருவாக்கமுடியாத சில ஆசிரியர்களே, ஆசிரியர் சங்கம் என்ற போர்வையில் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் சாடினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »