Our Feeds


Wednesday, July 14, 2021

www.shortnews.lk

பினையில் விடுவிக்கப்பட்ட நபர்களை தடுத்து வைப்பது சட்ட விரோதமானதாகும். - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கண்டனம்.

 



எதிர்ப்பை வெளிப்படுத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய மனித உரிமையாகும்.  குடிமக்களின் பேச்சுச் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு வழியாக போராட்டங்களை சுட்டிக்காட்டலாம்.


போராட்டங்கள் ஒரு  உயிர்புள்ள ஜனநாயக சமூகத்தில் அவசியம் இருக்கும், இருக்க வேண்டிய ஓர் விடயமாகும்.


வரலாறு முழுவதும் நேர்மறையான சமூக மாற்றத்திற்காக பேராட்டங்கள் அளித்த ஊக்கத்தின் ஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் மேற்கோள் காட்டலாம்.


சர்வதிகார ஆட்சிகள் மற்றும் முடியாட்சிகள் என்பவற்றின் தோல்விகளின் வரலாற்றைப் பார்க்கும்போது இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.


எதிர்ப்பை வெளிப்படுத்தல் எனும் விடயம் ஒரு ஜனநாயக சமூகத்தின் முன்னேற்றத்திற்கு  குடிமக்கள் நேரடியாக பங்களிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் நேரடி பிரதிநிதித்துவத்தில் ஈடுபட முடியாத ஒரு குடிமக்கள் குழுவிற்கு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில் இதற்கான இடம் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. ஒரு நாட்டின் நடப்பு ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை, அந்த ஆட்சிக்கு ஒரு சவாலாகவோ அல்லது சங்கடமாகவோ பார்த்தாலும், குடிமக்கள் தங்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.

கோவிட் 19 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும், குடிமக்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமையை இயற்கையே  தடை செய்துள்ளது.


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம், உள்ளிட்ட பேச்சு வெளிப்பாடுச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும்  அமைதியான ஒன்றுகூடல்களுடன் அமைதியான பங்கேற்புகளை உறுதிப்படுத்துகிறது. எமக்குத் தெரிந்தவரை, எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.


கோவிட் -19 தொற்றுநோய் பரவலுடன், உலகம் முழுவதும் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, மேலும் பல சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வர்த்தமானி விதிமுறைகள் போன்றவற்றுக்குள் கட்டுப்படுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையை உலகம் முழுவதும் நாம் காணலாம்.


இதற்கிடையில், தனிமைப்படுத்தல் ஒரு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை என்றும் அது தண்டனையாகவோ அல்லது தடுப்புக்காவலாகவோ பயன்படுத்தப்படக்கூடாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பினையில் விடுவிக்கப்பட்ட நபர்களை தடுத்து வைப்பது தனிமைப்படுத்தல் மையங்களில் கட்டாயமாக தடுத்து வைப்பது வலுக்கட்டாயமானதும் சட்டவிரோதமானதுமாகும்.

இந்த நடவடிக்கை, சந்தேக நபர்களை பினையில விடுவித்த நீதிமன்றத்திற்கு அவமானம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.


இத்தகைய கைதுகள் மற்றும் பலவந்தமான தடுப்புக்காவல்கள் கோவிட் -19 யை தனிப்பதற்கான சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் துறையின் உண்மையான முயற்சிகளுக்கு எதிர்பாராத தீங்குகளை விளைவிக்கும்.

எதிர்ப்பு தெரிவிக்கும்  குடிமக்களின் சுதந்திரத்தை மோசமாக பாதிக்கும் வகையில் சுகாதார வழிகாட்டுதல்களை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதே அவற்றின் நோக்கம் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாய எழுச்சிகள் மற்றும் இனவெறி மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான அமெரிக்காவில் நடைபெறும் பேரணிகள் போன்ற போராட்டங்களுக்கு ஜனநாயக சமூகத்திற்குள் இருக்கும் வாய்ப்புகளை காண்கிறோம்.


தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் போர்வையில்,குறிப்பாக அரசியல்வாதிகள், பெருமளவிலான அதிகாரத்தில் இருப்பவர்கள்,தங்கள் எதிரிகளை அடக்குவதற்கும் அவர்களின் குரல்களை மௌனமாக்குவதற்கும் இந்த சட்டங்களைப் பயன்படுத்துவதை நாம் தெளிவாகக் காணலாம்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளார் "கோவிட் அச்சுறுத்தலின் பேரில் சில நாடுகளில் உள்ள பொறுப்புக் கூறவேண்டியவர்கள், மாற்றுக் கருத்தாளர்களை மௌனமாக்குவதற்கும், அடக்குவதற்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கையிடல் மற்றும் அவற்றின் அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வதையும் நாங்கள் காண்கிறோம்”. இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சிறப்பு ஏற்பாடுகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.


ஏதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கும், நாட்டு மக்கள் மத்தியில் அச்சமான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கும் ஒரு வழிகாட்டியாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை கடந்த சில நாட்களாக இலங்கை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டில் என்ன நடக்கிறது என்றால், ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பாராளுமன்ற பிரவேசத்தின் போது முன்னெடுககப்பட்ட வெற்றிக் கொண்டாட்டங்களில் ''சட்டம்'' செயலில் இல்லை. அதே நாளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற மசோதாவை எதிர்க்கும் மக்கள் குழுவுக்கு எதிராக "சட்டம்" மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் நடைமுறையில் ஒரு சட்டமா அல்லது இரண்டு சட்டங்களா என்பது ஒரு மிகப் பெரிய மர்மமாகும்.  இன்று முழு நாடும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. வறுமை, வேலையின்மை, சுகாதார நெருக்கடி, கடன் நெருக்கடி. உர நெருக்கடி, நண்பர்களின் ஆதிக்கம்  முதலாளித்துவம், மேலாதிக்கம், போன்ற இன்னோரன்ன நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் இடம்பெறுகின்றது.


இந்த அநியாயம் மற்றும் போலி கொள்கைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். நமது மக்களின் சுதந்திர உரிமைகளுக்கான  சவால்களை முறியடிக்க வேண்டும்.  இதற்காக பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் உள்ளது. நீதிமன்றங்கள் முன் ஒரு போராட்டமும் உள்ளது. ஜனநாயக முறையில் மக்களுடன் நடத்தப்பட வேண்டிய போராட்டமும் உள்ளது.


நமது சமூகத்தின் ஜனநாயக இருப்பு எதிர்கொண்டிருக்கும் இந்த ஆபத்துக்களையும் சவால்களையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையைத் தோற்கடிப்பதற்காக குறுகிய நோக்கங்கள் இல்லாமல் ஜனநாயகத்தின் இருப்பைப் பாதுகாக்க அனைத்து அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட அனைத்து அமைப்புக்களும் மக்களும் ஒன்றாக நிற்க வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் ஒரு பரந்த சிந்தனைப்பார்வையோடும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.


இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »