Our Feeds


Monday, July 26, 2021

www.shortnews.lk

என் மகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் - ஹிஷாலினியின் தாய் கோரிக்கை

 



(எம்.மனோசித்ரா)


தமது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாரிய சந்தேகம் நிலவுவதாகவும் , எனவே மீண்டும் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்க்கப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாய் ஆர்.ரஞ்சனி தெரிவித்தார்.


பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹிஷாலினி தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்த ஆர்.ரஞ்சனி , தனது மகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது அசைவும் இன்றியே காணப்பட்டார். கண்களைக் கூட திறக்கவில்லை. வாய்ப் பகுதியில் பட்டியொன்று கட்டப்பட்டிருந்தது. அவ்வாறிருக்கையில் அவர் எவ்வாறு ‘நான் தான் தீமூட்டிக் கொண்டேன்’ என்று கூறியிருப்பார் என்றும் கேள்வியெழுப்பினார்.

சிறுமியின் தாய் ஆர்.ரஞ்சனி மற்றும் தந்தை ஜூட்குமார் ஆகியோர் இன்று (26) திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மகள் பணிபுரிந்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ஒரு முஸ்லிம் பொலிஸ் அதிகாரி  காணப்பட்டார். அதே போன்று மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையும் முஸ்லிம் வைத்தியர் ஒருவராலேயே வழங்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய மகள் ‘தானே தீமூட்டிக் கொண்டேன்’ என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. எனவே மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நான் உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

என்னுடைய மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் எனக்கு சந்தேகம் நிலவுகிறது. காரணம் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது நான் அவரை பார்வையிடச் சென்ற போது ஒரு எவ்வித அசைவும் இன்றியே காணப்பட்டார். கண்களைக் கூட திறக்கவில்லை. வாய்ப்பகுதியில் பட்டியொன்று கட்டப்பட்டிருந்தது. அவ்வாறிருக்கையில் அவர் எவ்வாறு ‘நான் தான் தீமூட்டிக் கொண்டேன்’ என்று கூறியிருப்பார்?

எனது மகளின் மரணத்துக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளேன். அவரது மரணத்துக்கான நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜூன் மாதமே என்னுடன் இறுதியாக என்னிடம் பேசினார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 நிமிடங்கள் மாத்திரமே அவருக்கு என்னுடன் பேசுவதற்கு வாய்ப்பளிப்பார்கள். இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாதளவுக்கு அவரை துன்புறுத்தியுள்ளனர்.

எனது மகள் பணிபுரிந்த வீட்டில் அவர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு முறையாக உணவு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு அவர் மின்விளக்கு அற்ற இருட்டு அறையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »