Our Feeds


Monday, July 19, 2021

www.shortnews.lk

ரிஷாதின் வீட்டில் பணிபுரிந்த மலையக சிறுமி மரணம் - பொலிஸ் நிலையம் சென்ற மனோ - நடந்தது என்ன?

 



நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் தீ காயங்களுக்குள்ளாகி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினி என்ற சிறுமி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும் நுவரெலிய மாவட்ட தமுகூ எம்பி உதயகுமாரும் நேற்று (18) பொரளை பொலிஸ் நிலையம் சென்று குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தனர்.


பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம கண்காணிப்பாளர் (சிஐ) துமிந்த பாலசூரிய மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதம கண்காணிப்பாளர் (சிஐ) இனோகா ஆகியோரை சந்தித்த எம்பீக்கள் இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகள் பற்றியும், மரணமானவரின் உடற்கூற்று சட்ட மருத்துவ அறிக்கை தொடர்பிலும் முழுமையாக கேட்டறிந்தனர்.

ஹிஷாலினியின் சொந்த ஊர் மற்றும் அவரது பெற்றோர் வசிக்கும் நுவரெலியா மாவட்ட டயகம பிரதேசத்தை கண்காணிக்கும் டயகம பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி பொலிஸ் கண்காணிப்பாளர் (ஐபி) பாலிதவை தொலைபேசியில் அழைத்த மனோ கணேசன் எம்பி, ஹிஷாலினி உட்பட, இத்தகைய வீட்டு பணியாளர்களை கொழும்பு மற்றும் நகர்புற இல்லங்களுக்கு பணியாளர் தொழிலுக்காக கொண்டு சென்று சேர்த்த, இப்பகுதியை சேர்ந்த தரகரிடம் உடனடி வாக்குமூலம் பெற்று விசாரணைகள் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் குறித்த தொழில் தரகர் நாளை (19) திங்கட்கிழமை மேலதிக விசாரனைகளுக்காக, கொழும்பு பொரளை பொலிஸாரினால் கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறார்.

இந்நிலையில், ஹிஷாலினி என்ற இந்தச் சிறுமியின் அகால மரணம் தொடர்பில் பொது வெளியில் நிலவும் கருத்துகள் சம்பந்தமாக கண்டி மாவட்ட தமுகூ எம்பி வேலு குமார், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியுடன் கலந்தாலோசித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் குடும்பத்தவர் மற்றும் ரிஷாத் பதியுதீனின் எம்பி தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, அவர்கள் தரப்புகள்  இந்தச் சம்பவம் தொடர்பிலான முழுமையான விபரங்களை ஓர் எழுத்துமூல அறிக்கையாக உடன் வெளியிடும்படி, வேலு குமார் எம்பி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »