Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

இரண்டு மாதத்தின் பின் டெல்டா வைரஸின் தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பிக்கும்! - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.

 



(நா.தனுஜா)


உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் – 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 – 3 மாத காலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே, தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இரு மாத காலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத் தொடங்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார்.


அதுமாத்திரமன்றி நாடு மிகமோசமான தொற்றுப்பரவல் நெருக்கடி ஒன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும்.

அத்துடன் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கென ஒரு சீரான வழிமுறை உள்ளது. அதனைப் பின்பற்றாமல், உடனடியாகக் கொடுப்பனவு அதிகரிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த அரச சேவையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்திருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் இது பாதகமான பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று வைத்தியநிபுணர்கள் எதிர்வுகூறியிருக்கும் நிலையில், இதுகுறித்து வினவியபோதே வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »