Our Feeds


Tuesday, July 13, 2021

www.shortnews.lk

பேச்சு சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் நடவடிக்கை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

 



(இராஜதுரை ஹஷான்)


ஊடகங்களினதும், பொதுமக்களினதும் பேச்சு சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்பு தரப்பினரால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் ஊடகவியலாளர்கள் முதலில் முறைப்பாடளிக்க வேண்டும்.

அந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்மவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊடகவியலாளர்களினதும் நாட்டு மக்களினதும் பேச்சு சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான வழியில் பயன்படுத்தும்போது அதற்கு எதிராக நடவடிக்கைகள் உரிய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும். இதனை பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது என்று குறிப்பிட முடியாது.

நாட்டு மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு, ஊடகங்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பு ஊடகத்துறை அமைச்சுக்கு உள்ளது. இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோம். நாட்டு மக்கள் உண்மை விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்திந்கு எதிராக கடந்த வாரம் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்பாட்டத்தின்போது போராட்டகாரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது செய்தி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதலை முன்னெடுத்ததாக குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் இருப்பின் அவர் முதலில் முறைப்பாடளிக்க வேண்டும். அவர் வழங்கும் முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளேன்.

தனியார் ஊடகத்துக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றினார்.இதில் எவ்வித உண்மை தன்மையும். கிடையாது. ஒரு சில ஊடகங்களின் செயற்பாடுகள் ஊடக கொள்கைக்கு முரணாக காணப்படுகிறது. அதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை கோரப்பட்டது. இதனை எவ்வாறு தவறான செயற்பாடு என்று குறிப்பிட முடியும். சட்ட கட்டமைப்பில் இருந்து அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காண முயல்வதை எதிர்தரப்பினர் அரசியலாக்க முனைகிறார்கள்.

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்காக விற்பனை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள விடயம் சமூகத்தின் மத்தியில் பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.ஒரு சில சமூக வலைத்தளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »