Our Feeds


Sunday, July 11, 2021

www.shortnews.lk

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி: ஆதித்தியன் தொடர்பான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு.

 



(எம்.எப்.எம்.பஸீர்)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்னத்தின் மகனான கனகரத்தினம்  ஆதித்தியனுக்கு எதிராக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19.22.26.27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக ஐந்து தினங்களுக்கு இந்த விசாரணைகளை நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் அரச சாட்சிகளுக்கு குறித்த தினங்களில் நீதிமன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் இஸ்ஸதீன் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய பசீர் வலி மொகமட்டை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பிலான சந்தேகத்தில் கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கே எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக விசாரணை செய்யப்படவுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆகஸ்ட் மாதம் 14 ஆந் திகதி பாகிஸ்தான் உய் ஸ்தானிகர் பசீர் வலி மொஹம்மட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அதில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனகரத்தினம் ஆதித்தனுடன் மேலும் இருவரும் இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைதியான கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகி வருவதுடன் கடந்த தவணையின்போது அவர் முன்வைத்த வாதங்களை மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணைகளுக்கு தொடர்ச்சியான திகதிகளை அறிவித்தது.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், ‘ கடந்த 12 வருடங்களாக தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரே அரசியல் கைதியே எனது சேவை பெறுநரான இவ்வழக்கின் பிரதிவாதியாவார்.

இவர் கடந்த 12 வருடங்களாக அவர் மஹர சிறைச்சாலையில் பிரத்தியேக பகுதியில், தடுப்புக்காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனது சேவை பெறுநரான இந்த பிரதிவாதிக்கு எதிராக இதற்கு முன்னர் ஒரேயொரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட சில வழக்குகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, பாதுகாப்பு செயளாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ (தற்போதைய ஜனாதிபதி) முன்னாள் இராணுத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அவ்வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அவ்வழக்குகளிலும் நானே ஆஜராகி கணகரத்தினம் ஆதித்யன் சார்பில் ஆஜரானேன். அவ்வழக்குகளில், குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி, அப்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறான நிலையிலேயே எனது சேவை பெறுநர் கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு இந்நீதிமன்றில் 2019ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இந்த வழக்கிலும் கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக முக்கிய சான்றாக குற்ற ஒப்புதல்வாக்குமூலம் ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த ஒப்புதல் வாக்குமூலமும் இந்த நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கை முன் கொண்டு செல்ல சட்டமா அதிபர் 65 சாட்சியாளர்களை அரச சாட்சியாக பட்டியலிட்டு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பும்படி இந்த நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இந்த நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட பின்னர் 2019 ஆம் ஆண்டிலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த வழக்கின் மேலதிக விசாரணைக்கு பல தவணை வழங்கப்பட்டதெனினும் சாட்சிகள் நீதிமன்றில் சமூகமளிக்காமையாலும் கடந்த வருடத்திலிருந்து கொவிட் – 19 காரணமாகவும் வழக்கு தொடர்ச்சியாக பிற்போடப்பட்டே வந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் 12 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் கீழ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்காப்பட்டிருக்கும் ஒரேயொரு அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தியனவார். கடந்த 2009 மே 13 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் அது முதல் தடுப்புக் காவல் உத்தரவின் கீழேயே வைக்கப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கை விசாரணைக்காக திகதியிடும்படி வேண்டுகிறேன்.’ என தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் இஸ்ஸதீன் அரச சாட்சிகளுக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்ற பதிவாளருக்கு உத்தர்விட்டு மேலதிக விசாரணகளை இம்மாதம் 19.22.26.27மற்றும் 28 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »