Our Feeds


Friday, July 30, 2021

www.shortnews.lk

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கே அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்கு செல்ல அனுமதி - அரசு யோசனை

 



நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கேற்ப, அவர்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து விசாரணை செய்வதும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி   சுட்டிக்காட்டினார்.

இது பற்றி பிரதேச செயலக மட்டத்தில் துரித கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டு, சில தினங்களுக்குள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அ இதனைத் தெரிவித்தார்.

“தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் வகையில் செயற்படுவதும் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக் கொள்வதும் மக்களின் கடமையாகுமென, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வருகை தரும் மக்கள், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் அட்டையைத் தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்தும் கொவிட் குழு கவனம் செலுத்தியுள்ளது என ஜனாதிபதி  ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »