அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்த தோல்வியை, சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் இருந்த அரிசி கையிறுப்பு தீர்ந்துள்ள நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்கள் 80 - 90 ரூபாய்க்கு அரிசி கிலோ ஒன்றை கொள்வனவு செய்து, அவற்றை 240 ரூபாய்க்கு, அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபத்தை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அரிசி ஆலை உரிமையாளர்களால் இந்தத் தொகையை இலகுவாக செலுத்த முடியும். எனவே விவசாய அமைச்சர் என்ற வகையில், இந்த அபராதத் தொகையை ஒரு இலட்ச ரூபாயாக அதிகரிக்க யோசனை ஒன்றை தான் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரிசியை இறக்குமதி செய்வதற்கு, எந்தவொரு தரப்புக்கும் இதுவரையில் இறக்குமதி உரிமம் வழங்கப்படவில்லை. அரிசியை இறக்குமதி செய்ய வேண்டுமென வர்த்தக அமைச்சர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளபோதிலும், அது தொடர்பில் எந்தவிதமானத் தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் கூறினார்.
இதேவேளை, அரிசியை ஏற்றுமதி செய்யுமளவுக்குத் தேவையான அரிசி நாட்டில் காணப்படுகிறது. ஆனாலும் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்தார்.