Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

கொழும்பில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் - இடங்களும் அறிவிப்பு!

 



(நா.தனுஜா)


கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் முதலாம்கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 55 – 69 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரண்டாம்கட்டமாக   வழங்கும் நடவடிக்கைகள் நாளை (07)ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கென  25,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக சுகாதார அமைச்சினால் மேற்கண்டவாறு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதலாவது தொகுதி பைஸர் தடுப்பூசிகள் திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்திருக்கும் நிலையிலேயே, கொழும்பு மாநகரத்தில் அஸ்ராசெனேகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்ற 55 – 69 வயது வரையானோருக்கு இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் அஸ்ராசெனேகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 55 – 69 வயதுக்கு உட்டவர்களுக்கு இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் (புதன்கிழமை) 3 தடுப்பூசி வழங்கல் நிலையங்களின் ஊடாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி வெள்ளவத்தை ரொக்ஸி கார்டன் சனசமூக நிலையம், மாளிகாவத்தை பி.டிசிறிசேன மைதானம் மற்றும் நாரஹென்பிட்டி இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றின் ஊடாகவே இன்றைய தினம் மேற்படி தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்கு  உட்பட்ட தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் அஸ்ராசெனிகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு எதிர்வரும் 5 – 6 நாட்களுக்குள் இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு எப்போது, எங்கே வருகைதர வேண்டும் என்ற விபரங்கள் குறுஞ் செய்தி மூலம் அனுப்பிவைக்கப்படும். குறுஞ்செய்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறான கையடக்கத் தொலைபேசி வசதியை கொண்டிராதவர்களுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக மேற்படி விபரங்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »