Our Feeds


Tuesday, July 20, 2021

www.shortnews.lk

சமூக பிரச்சினைகளை இடியப்ப சிக்கலாக மாற்றி சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள் - மு.கலாசார திணைக்கள பணிப்பாளரிடம் ஹிதாயத் சூடான கேள்வி

 



சமூகமாக சிந்தித்து ஒன்றுபட்ட நிலையில் மற்றைய சமூகங்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டிய சமூகக் கட்டமைப்பானது இன்று  கேள்விக்குறியாகியுள்ளது.


சமூகத்தின் காவலனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சில நிறுவனங்களும் காட்டிக் கொடுத்து ஏதோ ஒன்றில் குளிர்காய துடிப்பது போன்றுள்ளது. 


தொன்றுதொட்டு காணப்பட்ட மரபுகள், ஷரியா எனும் மார்க்க சட்ட திட்டங்கள், பெருநாள் முதல் காதி நீதிமன்ற விவகாரம் வரை தன்னாலான செயற்பாடுகள் மூலம் தன் மரபை காப்பதற்கு மாற்றமாக தன் சமூகத்தின் பக்க நியாயத்தை காட்டிலும் நடைமுறை நியாயங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு குறுகியகால சிந்தனைகளை வைத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.


முஸ்லீம் கலாச்சாரத் தினைக்களம் எமது சமூகத்தை காப்பது மட்டுமல்லாது தூரநோக்குள்ள சிந்தனை திறன்மிக்க முடிவுகளின் ஊடாக வழிநடத்தும் பக்குவத்தை தன்னகத்தே கொண்டு இருத்தல் இக்காலகட்டத்தில் அத்தியவசியமாகும். 


பிரச்சினைகள் முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இன்று நாட்டில் நடைமுறையிலுள்ள முஸ்லீம் விரோத கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் தீர்மானங்கள் எடுக்கப்படாமல் பல் நோக்குடனான அனைத்து பக்க நியாயங்களை வைத்து தீர்மானம் முடிவுகள் எடுப்பது மிகமுக்கியம் என்பதனை சமூக அமைப்பாக தன்னை அடையாளப்படுத்த எத்தனிக்கும் அமைப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


வேலிகள் பயிரை காக்க வேண்டுமே தவிர வேலிகள் பயிரை மேய கூடாது. இதற்குமுன் பலவிடயங்கள் பறிபோன போதெல்லாம் தன் அமைதியை கடைப்பிடித்த அமைப்புக்கள் பள்ளி வளாகத்தில் மாடு அறுக்க தடை மற்றும் சட்டவியல் விவகாரங்கள் நடைமுறையில் முஸ்லிம்கள் சார்பான பிரச்சினைகள் போன்றவற்றில் முன்வந்து சமூகத்திற்காக பேசவேண்டியவர்கள் தற்போதைய கோவிட் சூழ்நிலையில் சுகாதார அமைச்சு அல்லது உள்ளுராட்சி அமைச்சு சொல்லாத விடயங்களில் உட்புகுந்து தொடர்ந்தும் செய்துவந்த எமது உரிமைகளை சமூகத்துக்கு தூரமாக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.


சமூக பிரச்சனைகளுக்ககான தீர்வுக்கு பதிலாக அந்தப் பிரச்சினைகளை பூதாகரமாக்கி இடியாப்ப சிக்கலை ஏற்படுத்துவதனூடாக உண்மையான முடிவுகளுக்கு பதில் இடியாப்ப சிக்கல் உடனான நிலைமையை ஏற்படுத்தி சமூகத்துக்கு செய்ய எத்தனிக்கும் நன்றிக்கடன் என்ன ???


இதுவரை காலமும் சாதாரண ஒரு வழமையாக காணப்பட்ட பள்ளிவாசல் வளாகத்தில் கூட்டு உழ்கிய்யா கொடுக்கும் நிகழ்வை மாற்றியமைத்து சுற்றுநிருபம் வழங்கும் அளவிற்கு ஒரு முடிவை எடுக்க முன்னர் இவர்கள் சமூகத்தில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை, முஸ்லீம் அரசியல் தலைமைகள் மற்றும் முஸ்லீம் சிவில் அமைப்புக்களுடன் இது பற்றிய கருத்துக்களை கேட்டு செய்திருக்கலாம் மேலும் இதன் பின்னராவது ஒரு முடிவை எடுக்க முன்னர் பலவகையிலும் சிந்தித்து எமது சமூகத்தின் உரிமைகளுக்காக செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் வேண்டுகோள் 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »